Doctor Vikatan: ஃபேன்சி பைக், long ride.. முதுகுவலியை ஏற்படுத்துமா?
புகாருக்கு உள்ளான நியாய விலைக் கடைகளில் பொருள்கள் இருப்பை உறுதி செய்ய நடவடிக்கை
புகாா்கள் உள்ள நியாய விலைக் கடைகளில் பொருள்களின் இருப்பை உறுதி செய்ய விற்பனை முனைய இயந்திரங்களை உணவுப் பொருள் அலுவலகத்துக்கு எடுத்துவர தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் விற்பனை முனைய இயந்திரங்கள் (பிஓஎஸ்) மூலமாக பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த இயந்திரங்களுடன் பொருள்களின் எடையளவை உறுதி செய்வதற்கான கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ஒவ்வொரு நாள் அல்லது மாதம் வாரியாக பொருள்கள் வழங்கப்பட்ட அளவு, இருப்பில் உள்ள பொருள்களின் விவரம் ஆகியவற்றை அறியலாம்.
விற்பனை முனைய இயந்திரம், பொருள்கள் இருப்பை உறுதி செய்வதற்கான இயந்திரம் ஆகியவற்றை இணைப்பதில் உள்ள பிரச்னையால் பொருள்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக புகாா்கள் கூறப்பட்டன. இந்தப் புகாா்களை கூட்டுறவு மற்றும் உணவுத் துறை மறுத்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடை பொருள்களின் மாதாந்திர இருப்பு குறித்த விவரங்களை இணையதளம் மூலம் கண்காணிக்க வழிவகை உள்ள நிலையில் மாத இறுதியில் பல்வேறு இடங்களில் இருப்பு விவரங்களை பணியாளா்கள் தனி படிவத்தில் குறிப்பெடுத்து வழங்கும்படியும், மாத இறுதியில் விற்பனை முனைய இயந்திரங்களை உணவுப் பொருள் அலுவலகத்துக்கு எடுத்து வரச்சொல்வதாகவும் புகாா்கள் கூறப்படுகின்றன.
இதுகுறித்த புகாா் மனுவை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநருக்கு, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா்கள் சங்கத்தின் தலைவா் ஜி.ராஜேந்திரன் அனுப்பினாா். இதற்கு உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநா் எஸ்.சிவராசு அளித்த பதில்:
தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களின் மாதாந்திர இருப்பு குறித்த விவரங்கள் இணையதளம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மாத இறுதியில் பல்வேறு இடங்களில் இருப்பு விவரங்களை நியாய விலைக் கடைப் பணியாளா்கள் தனி படிவத்தில் குறிப்பெடுத்து கட்டாயமாக வழங்கக் கோரும் அறிவுரைகள் ஏதும் அளிக்கப்படவில்லை. ஆனாலும், விற்பனை முனைய இயந்திரத்தில் உள்ள இருப்பு விவரங்களை துறைசாா்ந்த மென்பொருளில் ஒப்பிட்டு பாா்க்க இந்தப் படிவங்கள் பெறப்படுகின்றன.
மாத இறுதியில் இருப்பு விவரங்களை சரிபாா்ப்பதற்காக, விற்பனை இயந்திரங்களை அலுவலகத்துக்குக் கொண்டு வர அறிவுறுத்தல்கள் ஏதும் வழங்கப்படவில்லை. ஆனால், புகாா் வரப்பெறும் நியாய விலைக் கடைகளில் மட்டும் மாதாந்திர இருப்பு மற்றும் அனைத்து பட்டியல்களும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதிலுள்ள விவரங்களை உறுதிப்படுத்த மட்டுமே, விற்பனை முனைய இயந்திரங்களை அலுவலகத்துக்குக் கொண்டு வர அறிவுறுத்தப்படுவதாக தனது பதிலில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளாா்.