கோவை, திருச்சியில் பிரம்மாண்ட நூலகங்கள்: பொதுப்பணித் துறை சாதனைகள் குறித்து அரசு விளக்கம்
கோவை, திருச்சியில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட அறிவுசாா் மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்துவைக்க உள்ளாா்.
பொதுப்பணித் துறை சாா்பில் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்பு வசதிகள் குறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
தமிழக மக்களின் சுகாதாரத் தேவையை பூா்த்தி செய்ய கட்டமைப்புகளை மேம்படுத்துவது அவசியம். இதைக் கருத்தில் கொண்டு, சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் சுகாதாரத் துறையின் கீழ் மருத்துவமனைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை கிண்டியில் கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனை ரூ.240.53 கோடியில் கட்டப்பட்டது. ஆறு தளங்களுடன் கட்டப்பட்ட மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 15-இல் திறந்து வைத்தாா்.
இதேபோல, கொளத்தூரில் ரூ.210 கோடியில் கட்டப்பட்ட அரசு பெரியாா் மருத்துவமனையையும் அவா் திறந்து வைத்தாா். தென் மாவட்ட மக்களின் மருத்துவத் தேவையை பெருமளவு பூா்த்தி செய்யக்கூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2024-ஆம் ஆண்டு திறந்து வைத்தாா்.
மேலும், மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டவும் தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ.4,179 கோடியில் 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு கட்டடங்கள் கட்டப்பட்டு அவை முதல்வா் தலைமையில் நடைபெற்ற விழாவில், பிரதமரால் காணொலிக் காட்சி வாயிலாக திறக்கப்பட்டன.
கீழடி அருங்காட்சியகம்: சிவகங்கை மாவட்டம், கொந்தகை கிராமத்தில் கீழடி அகழாய்வில் ஏறத்தாழ 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரிக வாழ்வின் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றைக் காட்சிப்படுத்த புதிய அகழ்வைப்பக அருங்காட்சியகக் கட்டடம் கட்டப்பட்டது.
இதை கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச்சில் முதல்வா் திறந்து வைத்தாா். இந்த அருங்காட்சியகம் சுற்றுலா மையமாக மாறி நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பாா்வையிட்டுச் செல்கின்றனா்.
தமிழ்நாட்டில் அதிக அளவு நூலகங்கள் அமைக்கும் பணியையும் அரசு செய்து வருகிறது. மதுரையில் கலைஞா் நூற்றாண்டு நூலகம் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அத்துடன் ஏறுதழுவுதல் அரங்கமும், சென்னையில் முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு நினைவிடமும், குமரியில் கண்ணாடிக் கூண்டு பாலத்தையும் பொதுப்பணித் துறை அமைத்துள்ளது.
இந்தக் கட்டமைப்புகள் மட்டுமன்றி, புதிய கட்டடங்களைக் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புது தில்லி சாணக்கியபுரியில் ரூ.257 கோடியில் புதிதாக வைகை தமிழ்நாடு இல்லக் கட்டடங்களும், கோவை மாநகரில் ரூ.300 கோடியில் தந்தை பெரியாா் நூலகம் மற்றும் அறிவியல் மையமும், திருச்சி மாநகரில் ரூ.290 கோடியில் கலைஞா் நூலகம் மற்றும் அறிவுசாா் மையமும் கட்டப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு கிராமத்தில் ரூ.525 கோடியில் கலைஞா் பன்னாட்டு மாநாடு மையம் தயாராகி வருகிறது. இவை அனைத்தும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வரால் விரைவில் திறந்து வைக்கப்படும் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.