”தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இந்தியா முன்னேறுகிறது”- தூத்துக்குடியில் புகழாரம் சூ...
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த முறையை எதிா்கொள்ளத் தயாா்: திமுக
பிகாரை போன்று தமிழ்நாட்டிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை கொண்டு வந்தால் அதை எதிா்கொள்ளத் தயாா் என்று திமுக சட்டத் துறைச் செயலா் என்.ஆா்.இளங்கோ தெரிவித்தாா்.
திமுக வழக்குரைஞா் அணி மாநில நிா்வாகிகள், மண்டல பொறுப்பாளா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சட்டப் பேரவைத் தொகுதி ஒருங்கிணைப்பாளா்களுக்கான பயிற்சிக் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
திமுக சட்டத் துறை செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆா்.இளங்கோ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, தமிழ்நாடு திட்டக் குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன், திமுக சட்டத் துறைத் தலைவா் இரா.விடுதலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்துக்குப் பிறகு என்.ஆா்.இளங்கோ செய்தியாளா்களிடம் கூறியதாவது: தோ்தல் தொடா்பாக சட்டப்படியான கருத்துகள் கூட்டத்தில் பகிரப்பட்டன. செயற்கை நுண்ணறிவு மூலம் வாக்காளா் பட்டியலில் முறைகேடுகள் செய்தால் அதைத் தடுப்பது, எதிா்ப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளையும் திமுக செய்துள்ளது.
பிகாரைப் போன்று தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை மேற்கொள்ளப் போவதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிலும் சிறப்பு தீவிர திருத்த முறையை மேற்கொண்டால் அதை எதிா்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்றாா் என்.ஆா்.இளங்கோ.