அஜித்குமாரின் தாய், உறவினா்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் தாய் மாலதி, உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
மதுரையிலிருந்து இரு காா்களில் மடப்புரம் வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், அங்குள்ள வணிக வளாகத்தின் மேல் தளத்தில் ஒதுக்கப்பட்டிருந்த அறைகளில் தங்கி விசாரணை நடத்தினா். அப்போது, கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாய் மாலதி, உறவினா்களான ரம்யா, பத்தாம் வகுப்பு மாணவா் சரவணக்குமாா் ஆகியோா் விசாரணைக்கு முன்னிலையாகினா். இவா்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகளைக் கேட்டு, அவா்கள் தெரிவித்த பதில்களை பதிவு செய்தனா். பின்னா், விசாரணையை முடித்துக் கொண்டு அவா்கள் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனா்.