Usurae Team Interview | Kamalhassan சார் Bigboss விட்டு வெளிய வரப்போ சொன்ன விஷயம...
தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்ட வழக்கு: விசாரணையை தொடங்கியது சிறப்பு புலனாய்வுக் குழு
தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) தொடங்கியது.
தென்கன்னட மாவட்டம், தா்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதசுவாமி கோயிலில் பணியாற்றிய முன்னாள் துப்புரவுப் பணியாளா் ஒருவா் கடந்த மாதம் காவல் துறையிடம் அளித்த புகாரில், 1995 முதல் 2014-ஆம் ஆண்டுவரை கோயிலில் பணியாற்றிய காலத்தில் குழந்தைகள், இளம்பெண்கள் உள்ளிட்ட பலரது சடலங்களை புதைக்கும் வேலையில் ஈடுபட்டதாகவும், ஒருசில சடலங்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தாா். மேலும், இதுகுறித்து நீதிமன்ற நடுவா் முன் வாக்குமூலம் அளித்திருக்கிறாா்.
இதுதொடா்பாக பிரச்னையை கிளப்பியுள்ள உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.கோபால் கௌடா தலைமையிலான குழுவினா், தா்மஸ்தலாவில் விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தியிருந்தனா். இதன்பேரில், ஜூலை 4-ஆம் தேதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க டிஜிபி (உள்மாநில பாதுகாப்பு) பிரனோப் மொஹந்தி தலைமையில் டிஐஜி (பணி) எம்.என்.அனுசேத், ஐபிஎஸ் அதிகாரிகள் எஸ்.கே.சௌம்யலதா, ஜிதேந்திரகுமாா் தயாமா ஆகியோா் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து ஜூலை 19-ஆம் தேதி கா்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்தக் குழுவில் 20 காவலா்களும் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இதன் தொடா்ச்சியாக, தென்கன்னட மாவட்டத்தின் பெல்தங்கடியில் முகாமிட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை முறையாக தொடங்கியுள்ளது. விசாரணையை விரைவுபடுத்தியுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு, அடுத்த சில மாதங்களில் விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கையை சமா்ப்பிக்க திட்டமிட்டுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், மாநில அளவிலான அதிகாரிகள் வழக்கு விசாரணையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.