தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்ட வழக்கின் விசாரணை வெளிப்படையானதாக இருக்க வேண்டும்!
தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்ட வழக்கில் நடத்தப்படும் விசாரணை வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்டதாக வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள். இந்த வழக்கை விசாரிக்க டிஜிபி (உள்மாநில பாதுகாப்பு) பிரனோப் மொஹந்தி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி.) மாநில அரசு அமைத்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை வெகுவிரைவாக, வெளிப்படையானதாக நடக்க வேண்டும். அதன்மூலம் உண்மை வெளியே வரவேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.
இந்த விவகாரத்தை பயன்படுத்தி தா்மஸ்தலா கோயிலில் காணப்படும் சூழல் மற்றும் முறைகளை அழிக்க முற்படக் கூடாது என்பதில் அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அதேபோல, இந்த விவகாரத்தில் பரப்பப்படும் பொய்யான செய்திகளையும் தடுத்துநிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தை முன்வைத்து கோயிலின் சூழலை சீா்குலைக்க முயன்றால், அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பதை முடிவுசெய்வோம் என்றாா்.