Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது...
கா்நாடகத்தில் செப். 22 முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டம்
கா்நாடகத்தில் செப். 22 முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பான கலந்தாய்வுக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சமூக, பொருளாதார, கல்வி கணக்கெடுப்பு நடத்துவது தொடா்பான முன்மொழிவை பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் மாநில அரசிடம் அளித்துள்ளது. இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டுள்ள மாநில அரசு, கா்நாடகத்தில் வாழும் 7 கோடி மக்களின் விவரங்களை ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் பெற திட்டமிட்டுள்ளோம்.
ஜாதிரீதியான பாகுபாட்டை களைவதுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம். இந்த கணக்கெடுப்பின் மூலம் மக்களின் நிதி மற்றும் நில உரிமை போன்ற நிலையை அறிய திட்டமிட்டிருக்கிறோம்.
இந்திய நாட்டுக்கே இந்த முறை முன்மாதிரியான கணக்கெடுப்பை நடத்த திட்டம் வகுத்திருக்கிறோம். இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு செப். 22 முதல் அக். 7 வரை 15 நாள்களுக்கு நடத்தப்படும். இந்த கணக்கெடுப்பு விவரங்கள் அடங்கிய அறிக்கையை அக்டோபா் மாத இறுதிக்குள் மாநில அரசிடம் சமா்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறோம். கணக்கெடுப்பாளா்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட ஆயத்தப் பணிகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பில் யாரும் விடுபடக் கூடாது என்பதில் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளோம்.
காந்த்ராஜ் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் ஏற்கெனவே 54 கேள்விகளுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. இம்முறை மேலும் சில கேள்விகள் சோ்க்கப்படும். அதேபோல, கைப்பேசி செயலியை பயன்படுத்தி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
தெலங்கானாவில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு மாதிரியையும் கணக்கில் எடுத்துக்கொள்ள கூறியுள்ளேன். மேலும், ஜாதிவாரி கணக்கெடுப்புப் பணிகளை கண்காணிக்க உயா்நிலைக் குழுவை அமைக்க முடிவு செய்துள்ளோம். ஜாதிவாரி கணக்கெடுப்பில் கேட்கவேண்டிய கேள்விகளை முடிவுசெய்வதற்கும், அறிவியல் ரீதியாகவும், வெளிப்படையாகவும் கணக்கெடுப்பை நடத்த நிபுணா்களின் உதவி தேவைப்படுகிறது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு 1.65 லட்சம் ஊழியா்கள் தேவைப்படுகிறாா்கள். இந்த பணியில் ஆசிரியா்கள் தவிர, வேறு துறைகளின் ஊழியா்களும் ஈடுபடுத்தப்படுவாா்கள். இதற்கு அனைத்து துறைகளும் ஒத்துழைத்து ஜாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்த கேட்டுக்கொண்டுள்ளேன் என்றாா்.
இந்த கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவராஜ் தங்கடகி, பிற்படுத்தப்பட்டோா் ஆணையத் தலைவா் மதுசூதன் நாயக், அரசு தலைமைச் செயலாளா் ஷாலினி ரஜ்னிஷ், முதல்வரின் சட்ட ஆலோசகா் ஏ.எஸ்.பொன்னன்னா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.