யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது என்ன?
எந்த உணவு ஆர்டர் செய்தாலும், அவை பெரும்பாலும் கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களில்தான் நம் வீடுகளுக்கு டெலிவரி ஆகின்றன. பிரியாணியோ, ஃபிரைட் ரைஸோ அல்லது சாம்பார் சாதமோ சுடச்சுட அந்த கருப்பு நிற டப்பாவில் வருகிற உணவை, வரவிருக்கிற ஆபத்தை உணராமல் குழந்தைகளில் ஆரம்பித்து பெரியவர்கள்வரை ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்.
இதை வாசிக்கையில், 'என்ன, இதிலும் கேன்சர் வந்துவிடுமா; எதை எடுத்தாலும் இப்படி பயம் காட்டினால் என்னதான் செய்வது' என்று பலரும் நொந்துக்கொள்ளலாம். ஆனால், இந்த கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களால் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் பலரும் எச்சரித்திருப்பதால், இதுகுறித்து சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா அவர்களிடம் பேசினோம்.

''டிவி, கம்ப்யூட்டர் போன்ற எலெக்ட்ரானிக் பொருள்களில் இருக்கிற உலோகங்கள் மற்றும் மனிதர்களுக்கும் சுற்றுசூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய மெர்க்குரி, கேட்மியம் போன்றவற்றை நீக்கி விட்டு, பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்கிறார்கள். அந்த பிளாஸ்டிக்கில்தான் பெரும்பாலும் ஹோட்டல்களில் உணவை பார்சல் செய்கிற கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களை தயாரிக்கிறார்கள். தவிர, பொம்மைகள் மற்றும் சில கிச்சன் உபயோகப்பொருள்களையும் தயாரிக்கிறார்கள்.
இதில் எங்கே பிரச்னை வருகிறது என்றால், டிவி, கம்ப்யூட்டர் போன்ற எலெக்ட்ரானிக் பொருள்கள் எளிதில் தீக்கிரையாமல் இருக்க, அவற்றில் ஃபயர் ப்ரூஃப் ரசாயன பூச்சு கலந்திருப்பார்கள். இந்த ரசாயன பூச்சு, எலெக்ட்ரானிக் பொருள்களில் இருந்து மறுசுழற்சி மூலமாக தயாரிக்கப்பட்ட கருப்பு டப்பாக்களிலும் இருப்பதைக் கண்டறிந்து இருக்கிறார்கள். கருப்பு நிற பிளாஸ்டிக்கில் கார்பன் பிளாக் பிக்மெண்ட் என்கிற கருப்பு நிற நிறமி ஒன்றையும் சேர்க்கிறார்கள். இதுவும் புற்றுநோயை உருவாக்கத்தக்க காரணிகளில் ஒன்றாகவே மருத்துவர்களால் பார்க்கப்படுகிறது. தவிர, பாலி அரோமெட்டிக் ஹைட்ரோ கார்பன்களும் இந்த கருப்பு நிற பிளாஸ்டிக்கில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது வயிறு, கல்லீரல், சிறுநீரகல் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துவிடும்.

கருப்பு நிற டப்பாவில் வருகிற உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால்... இந்த பிளாஸ்டிக்கில் செய்யப்படுகிற பொம்மைகளை குழந்தைகள் அடிக்கடி வாயில் வைத்தால்... அதில் இருக்கிற பென்சோபிரீன், புரோமின் போன்ற ரசாயனங்கள் தொடர்ந்து நம் உடலில் சேர்ந்துகொண்டே இருந்தால், புற்றுநோய் வரலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் தன்மையும் இந்த ரசாயனங்களுக்கு உண்டு. தவிர, உடல் எடை கூடும்; குழந்தையின்மை பிரச்னை ஏற்படலாம்; கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கிற சிசு மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படலாம். கூடுதலாக, இதன் மூலம் நம் உடலில் சேர்கிற மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் நானோ பிளாஸ்டிக்கால் ரத்த ஒட்டத்திலும் பிரச்னை ஏற்படலாம்.
இதுதொடர்பான அறிவியல் ஆய்வுகள் இன்னமும் நேரடியாக நிரூபிக்கப்படவில்லை. என்றாலும், இந்த கருப்பு நிற டப்பாவில் இருக்கிற ரசாயனங்களில் புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜென் இருக்கிறது என்கின்றன ஆய்வுகள்.
கார்சினோஜென் என்பது புற்றுநோயை உருவாக்கும் ஒரு காரணி. இது நம் செல்களில் மாற்றங்களை ஏற்படுத்தி, புற்றுநோய் கட்டிகள் உருவாவதற்கு காரணமாக இருக்கும். உலக சுகாதார அமைப்புடன் சேர்ந்து இயங்குகிற International research Agency for cancer (IARC) என்கிற தன்னார்வல தொண்டு அமைப்பு, இதுபோன்ற ரசாயனங்களால் புற்றுநோய் உருவாகுமா என்று ஆய்வு செய்துகொண்டிருக்கிறது.

இறுதியாக, கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களை நீண்டநாள் தொடர்ந்து உபயோகிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. இதற்கு மாற்றைத் தேட வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவருமே இருக்கிறோம்'' என்று முடித்தார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா.
ஹோட்டல்கள், தங்கள் பயனர்களின் ஆரோக்கியத்தில் உடனடியாக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR