துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் இனிப்புக்கு ஸ்டீவ்யா பொடியை சேர்க்கலாமா? பாதிப்புகள் வராதா?
Doctor Vikatan: சர்க்கரைக்கு மாற்றாக ஸ்டீவ்யா(Stevia) பவுடர் சேர்த்துக்கொள்ளச் சொல்கிறார்களே... அது என்ன... அதைச் சேர்த்துக்கொண்டால் சர்க்கரையால் வரும் பாதிப்புகள் வராதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

ஸ்டீவ்யா என்பது ஒருவகை தாவரத்திலிருந்து பெறப்படும் இனிப்புச்சுவை. அதாவது சர்க்கரைத்துளசி அல்லது சீனித்துளசி எனப்படும் செடியிலிருந்து பெறப்படும் இது, சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.
சர்க்கரையைத் தவிர்க்க நினைப்பவர்கள், அதே சமயம், இனிப்பையும் விட முடியாத நிலையில், சர்க்கரைக்கு மாற்றாக ஸ்டீவ்யா பொடியை எடுத்துக்கொள்ளலாம்.
ஸ்டீவ்யா என்பது சர்க்கரையைவிட பல மடங்கு அதிக இனிப்புச் சுவை கொண்டது. எனவே, மிகக் குறைந்த அளவு பயன்படுத்தினாலே போதுமானதாக இருக்கும்.
ஸ்டீவ்யா பரிந்துரைக்கப்படுவதன் நோக்கமே, சர்க்கரைச் சத்திலிருந்து வெளியே வருவதற்காகத்தான். இதை எடுத்துக்கொள்வதால் பெரிய பாதிப்புகள் வராது. கெமிக்கல் சேர்த்துத் தயாரிக்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகளைச் சேர்த்துக்கொள்வதால்தான் கிட்னி பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதுவும் நிரூபிக்கப்படவில்லை. எனவே, இனிப்புக்கு மாற்றாக ஸ்டீவ்யா எடுத்துக்கொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரை நோய் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சர்க்கரையை அறவே தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தப்படும். அது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பதால், ஆரம்ப நாள்களில் ஸ்டீவ்யா பயன்படுத்த அறிவுறுத்தப்படுவதுண்டு. ஆனால், அவர்களும் இதை நாள்கணக்கில், மாதக்கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது.

சர்க்கரை நோயாளிகள் எந்த வித இனிப்பையும் அறவே தவிர்ப்பதுதான் ஆரோக்கியமானது. எனவே, ஆரம்ப நாள்களில் இனிப்பற்ற உணவுகளுக்குப் பழகும்வரை ஸ்டீவ்யா எடுத்துக் கொண்டாலும், படிப்படியாக இனிப்பிலிருந்து முழுமையாக வெளியே வருவதுதான் அவர்களுக்கான அட்வைஸ்.
ஒரு டீஸ்பூன் சர்க்கரை எடுத்துப் பழகியவர்கள், அதை அரை டீஸ்பூனாக குறைக்கலாம். பிறகு அதை கால் டீஸ்பூனாக குறைக்கலாம். அடுத்து முழுமையாகத் தவிர்த்து விடலாம். இப்படித்தான் அவர்கள் சர்க்கரையை விட்டு வெளியே வர முடியும். அப்படிப் பழகுவதுதான் அவர்கள் உடல்நலத்துக்கு நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.