துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
துருக்கியில், இ3 நாடுகள் (E3) மற்றும் ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை இன்று (ஜூலை 25) துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில், இ3 என்றழைக்கப்படும் ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளுடன், ஈரான் அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்த, ஈரானின் அரசியல் விவகாரங்களுக்கான துணை வெளியுறவுத் துறை அமைச்சர் மஜித் தக்த் - ரவஞ்சி மற்றும் சட்டம், சர்வதேச விவகாரங்களுக்கான துணை வெளியுறவுத் துறை அமைச்சர் காசெம் கரிபாபாடி ஆகியோர் தலைமையிலான குழுவினர், இஸ்தான்புல் நகரத்துக்குச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து, ஈரானின் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய் கூறுகையில், இந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலம் அந்த 3 நாடுகளும் ஈரான் அரசு மற்றும் அதன் அணுசக்தி மீதான தங்களது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது எனக் கூறியுள்ளார்.
மேலும், இந்தப் பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கமாக, இரானின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை விலக்கவும், அவர்களது அணுசக்தி திட்டத்தின் மீதான சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டு வரவும் முயற்சிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்பு, அணுசக்தியின் மூலப் பொருளான யுரேனியம் சேகரிப்பிற்கான ஈரானின் நிலைப்பாட்டை, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி மீண்டும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டின் செப்டம்பர் மாதம் முதல் ஈரான் மற்றும் இ3 நாடுகள் இடையில் 6 சுற்றுகளாக அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
முன்னதாக, ஜூன் 13 ஆம் தேதி, ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஈரானின் ராணுவத் தளவாடங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதனால், இருநாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற 12 நாள் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீது பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் இனி அரசியல் பதிவுகளுக்கு கட்டுப்பாடு!