பிகாரில் வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கை: முழுவீச்சில் எதிர்ப்போம்! -முதல்வர் ஸ்டாலின்
பிகாரில் வாக்காளர்களை நீக்குவதற்கான யுக்தியை தேர்தல் ஆணையம் கையாளுகிறது என்று முதல்வர் மு. க .ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிகார் மாநிலத்தில் 52 லட்சம் வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 7 லட்சம் போலி வாக்காளர்கள் பதிவு செய்திருப்பது தேர்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின்போது தெரிய வந்துள்ளது.
இந்தநிலையில், இது குறித்து மு. க .ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது: ‘தேர்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம், வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவது நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக, பல ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பாஜகவுக்கு சாதகமான நடவடிக்கையாக இந்த நடவடிக்கை திசை திரும்புகிறது. இத்தகைய நடவடிக்கையானது சீர்திருத்தம் அல்லவே.
பிஹாரில் நடைபெற்ற சம்பவங்கள் இதனை வெளிகாட்டுகின்றன. தங்களுக்காக வாக்கு செலுத்திய மக்களே திரும்பவும் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என தில்லி ஆளுமை தெரிந்து வைத்துள்ளது.
உங்களால் எங்களை வீழ்த்த முடியவில்லையென்பதால், எங்கள் வாக்களர்களை நீக்கும் நடவடிக்கையை கையிலெடுத்துள்ளீர்கள். நெருப்புடன் விளையாடாதீர்கள்.
நமது ஜனநாயகத்துக்கு ஏதேனும் அச்சுறுத்தல் விளைவிக்கபட்டால், கடும் எதிர்வினை எதிரொலிக்கும். தமிழ்நாடு முழு பலத்துடன் தமது குரலை எழுப்பும். இந்த அநீதிக்கு எதிராக நாங்கள் ஜனநாயக சக்திகளை ஒன்றுவிடாமல் திரட்டி போராடுவோம்.
இந்த விவகாரம் வெறுமனே பிஹார் என்ற ஒரேயொரு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. நமது குடியரசின் அடித்தளம் சம்பந்தப்பட்ட ஒன்று. ஜனநாயகம் மக்களுக்கே சொந்தம். அதை அபகரிக்க முடியாது!’ என்று குறிப்பிட்டுள்ளார்.