ஆபரேஷன் சிந்தூர்: மக்களவையில் விவாதத்தை தொடக்கி வைக்கும் ராஜ்நாத் சிங்!
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவாதத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைப்பார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவாதத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, அனுராக் தாக்கூர் உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி இந்த விவாவத்துக்கிடையே விளக்கம் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உடனடி விவாதம் கோரி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இதையடுத்து, மக்களவையில் 16 மணி நேர விவாதத்துக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி, அடுத்த வாரம் திங்கள்கிழமை (ஜூலை 28) விவாதம் தொடங்குகிறது.
அதற்கு மறுநாள்(ஜூலை 29), மாநிலங்களவையில் நடைபெறும் விவாதத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மாநிலங்களவையிலும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விளக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி அளிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, கிரண் ரிஜிஜு மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில், மாநிலங்களவையில் 16 மணி நேர விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தான் அகதிகள் 185 பேருக்கு இந்தியக் குடியுரிமை!