குஜராத்தில் தீவிரமடையும் பருவமழை! முழுக் கொள்ளளவை எட்டிய 28 அணைகள்!
குஜராத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அம்மாநிலத்தில் உள்ள 28 அணைகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில், வழக்கமாகப் பதிவாகும் பருவமழைப் பொழிவில், தற்போது வரை 55.26 சதவிகிதம் மழைப் பெய்துள்ளது பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதில், கட்ச் மாவட்டத்தில் 64 சதவிகிதம், தெற்கு குஜராத்தில் 59.11 சதவிகிதம், வடக்கு குஜராத்தில் 54.04 சதவிகிதம், சௌராஷ்டிராவில் 54.02 சதவிகிதம் மழைப் பொழிவானது பதிவாகியுள்ளதாக, அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குஜராத் முழுவதும் பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்திலுள்ள 206 அணைகளில், 28 அணைகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், 206 அணைகளில், 62 அணைகள் 70 முதல் 100 சதவிகிதமும், 41 அணைகள் 50 முதல் 70 சதவிகிதமும், 38 அணைகள் 25 முதல் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன.
இதில், அம்மாநிலத்தின் முக்கிய அணையான சர்தார் சரோவர் அணையானது தற்போது 59.42 சதவிகிதம் நிரம்பியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால், 48 அணைகள் உச்சக்கட்ட எச்சரிக்கை நிலையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், குஜராத்தின் கடல்பகுதியில் வரும் ஜூலை 28 ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அம்மாநிலத்தின் 10 மாவட்டங்களில் இருந்து 4,278 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர்: மக்களவையில் விவாதத்தை தொடக்கி வைக்கும் ராஜ்நாத் சிங்!