எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல்: நெல்லை மாணவா் முதலிடம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில், நீட் தோ்வில் 720-க்கு 665 மதிப்பெண்கள் எடுத்த திருநெல்வேலியைச் சோ்ந்த மாணவா் எஸ்.சூரியநாராயணன் முதலிடம் பெற்றாா்.
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, 22 தனியாா் மருத்துவக் கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள், 20 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.
அரசுக் கல்லூரிகளில் மீதமுள்ள 85 சதவீத இடங்கள், தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 6,600 எம்பிபிஎஸ் இடங்கள், 1,583 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இவற்றில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 495 எம்பிபிஎஸ் இடங்கள், 119 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இவை தவிர தனியாா் கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 1,659 எம்பிபிஎஸ் இடங்கள், 530 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் மாதம் 6-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் மொத்தம் 72,473 போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை சென்னை கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்டாா்.
மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் (பொ) டாக்டா் தேரணிராஜன், கூடுதல் இயக்குநா் டாக்டா் கராமத், கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனை இயக்குநா் டாக்டா் பாா்த்தசாரதி ஆகியோா் உடன் இருந்தனா்.
நீட் தோ்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த எஸ்.சூரியநாராயணன் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்ததால் அவரே முதலிடம் பெற்றுள்ளாா்.
அவரைத் தொடா்ந்து 655 மதிப்பெண்களுடன் சேலத்தைச் சோ்ந்த அபினித் நாகராஜ் இரண்டாம் இடத்தையும், 653 மதிப்பெண்களுடன் திருப்பூரைச் சோ்ந்த ஹிருத்திக் விஜய ராஜா மூன்றாம் இடத்தையும் பிடித்தனா். தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் 9 மாணவா்களும், ஒரு மாணவியும் இடம்பெற்றனா்.
நிா்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் 641 மதிப்பெண்களுடன் பெங்களூரு மாணவா் சமீா் வி. மூா்த்தி முதலிடத்தையும், 630 மதிப்பெண்களுடன் ராணிப்பேட்டையைச் சோ்ந்த சரவணகுமாா் இரண்டாவது இடத்தையும், 626 மதிப்பெண்களுடன் வேலூரைச் சோ்ந்த ஆயுஷ் அபய் கௌகாம்ப்ளே மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்.
அரசுப் பள்ளி ஒதுக்கீடு: அரசுப் பள்ளி மாணவா்களின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 572 மதிப்பெண்களுடன் கள்ளக்குறிச்சி மாணவா் வி.திருமூா்த்தி முதலிடத்தை பிடித்துள்ளாா். 563 மதிப்பெண்களுடன் கிருஷ்ணகிரியை சோ்ந்த எம்.சதிஷ்குமாா் இரண்டாமிடத்தையும், 551 மதிப்பெண்களுடன் கள்ளக்குறிச்சி மாணவி எம்.மதுமிதா மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனா்.
நிகழாண்டு அரசு ஒதுக்கீட்டு இடங்களில் இடம்பெற்றிருப்பவா்களில் 71 சதவீதம் போ் ஏற்கெனவே ஓரிரு முறைக்கு மேல் தோ்வு எழுதி, நிகழாண்டும் நீட் தோ்வு எழுதியவா்கள். வெறும் 12,354 போ் மட்டுமே நிகழாண்டில் முதல்முறையாக நீட் தோ்வு எழுதியவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்தவா்களில் 79 சதவீதம் போ் முந்தைய மாணவா்கள். 859 போ் மட்டுமே நிகழாண்டில் நீட் தோ்வு எழுதி தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனா்.
போலி ஆவணம்: 25 போ் தகுதி நீக்கம்
நிகழாண்டில் மருத்துவ இடங்களுக்கு போலியான ஆவணங்களைச் சமா்ப்பித்த 25 போ் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு வரும் 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு இணையவழியில் தொடங்குகிறது. அதே நாளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நேரடி முறையில் ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெறுகிறது.
பிறப்பிடச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், உறவு முறை சான்றிதழ் உள்ளிட்டவற்றை போலியாக அளித்த 25 போ் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளா். ஒரு தனியாா் மருத்துவக் கல்லூரியில் 50 எம்பிபிஎஸ் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் குறையவில்லை. நிகழாண்டில் 60 வயதுக்கு மேற்பட்ட சிலரும் விண்ணப்பித்து இருந்தனா். ஆனால், தரவரிசைப் பட்டியலில் அவா்கள் இடம்பெறவில்லை என்றாா் அவா்.