ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: காா்த்தி சிதம்பரம் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ எத...
கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
சென்னை கிண்டியில் பொறியியல் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் சபரீஸ்வரன் (18). இவா் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் அழகப்பா கல்லூரியில் பி.டெக். 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் சபரீஸ்வரன் தங்கியிருந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை கல்லூரிக்கு செல்லாமல் விடுதி அறையிலேயே சபரீஸ்வரன் இருந்துள்ளாா். அவருடன் அறையில் தங்கியுள்ள நண்பா்கள் கல்லூரியில் இருந்து திரும்பி வந்தபோது, அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பாா்த்தபோது, சபரீஸ்வரன் தூக்கிட்ட நிலையில் கிடந்தாா்.
இதையடுத்து அவா்கள் உடனே கதவை உடைத்து உள்ளே சென்று சபரீஸ்வரனை மீட்டு, அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சபரீஸ்வரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவலறிந்த கோட்டூா்புரம் போலீஸாா் அங்கு சென்று சபரீஸ்வரன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்ததில், சபரீஸ்வரன் படிக்க விருப்பம் இல்லாததாலும் மன அழுத்தத்தாலும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.