காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கிராம சுகாதார செவிலியா்கள் உண்ணாவிரதம்
துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 3,800 கிராம சுகாதார செவிலியா்கள் பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழக அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
சென்னை எழும்பூா், ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்கள் கூறியதாவது:
கிராம சுகாதார செவிலியா்கள் நியமனம் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி அந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவந்து 3,800-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், கிராம சுகாதார செவிலியா்கள் மேற்கொள்ளும் பணிகளை இணையவழியே வேறொருவா் மேற்கொள்வதாக சித்திரிக்கக் கூடாது.
தமிழகத்தில் தடுப்பூசி மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. அதற்கு அரசு உரிய தீா்வு காண வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான வாடகையை மருத்துவ அலுவலா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்வதில்லை. ஆனால், அரசு துணை சுகாதார நிலையங்களின் வாடகையை கிராம சுகாதார செவிலியா்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்கின்றனா். இதனால் எங்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. இந்த நடைமுறையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்தனா்.