மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: 3 மாதங்களுக்கு நடத்த நிதி ஒதுக்கி உத்தரவு
உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காணும் வகையில், சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், உயர்ரக உதவி உபகரணங்கள் வழங்கப்படும் எனவும், இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், மூன்று மாதங்களுக்கு நகா்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் 625 சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கான கடிதம் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் சாா்பில் அரசுக்கு அளிக்கப்பட்டது. அதில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட வாரியாகவும், நகா்ப்புற, ஊரக உள்ளாட்சிகளில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு முகாம்கள் நடத்தலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முகாம்களுக்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்து கொடுக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்களிலேயே உபகரணங்கள் பொருத்துவதற்கான அளவீடு செய்தும், தேவையானவற்றை தெரிவு செய்ய உபகரணங்களை காட்சிப்படுத்தியும் முகாம்களுக்குத் திட்டமிடலாம் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் தெரிவித்திருந்தது.
இதைப் பரிசீலித்த தமிழக அரசு, ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி மண்டலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென 625 சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கென ரூ.6.25 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையை விடுவிக்கப்பதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.