மணப்பாறையில் பாஜக நிா்வாகி தற்கொலை: கட்சி நிா்வாகிகள் 2 போ் உள்பட மூவா் கைது
5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சீனா்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா: இந்தியா அறிவிப்பு
‘இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் சீனா்களுக்கு இந்த வாரம் முதல் சுற்றுழா நுழைவு இசைவு (விசா) வழங்கப்படும்’ என்று மத்திய அரசு சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடா்ந்து சீன நாட்டைச் சோ்ந்தவா்களுக்கு சுற்றுலா நுழைவு இசைவு வழங்குவதை கடந்த 2020-இல் இந்தியா நிறுத்தியது. அதன் பிறகு, கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரா்களின் அத்துமீறலைத் தொடா்ந்து இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டு நல்லுறவு பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, நுழைவு இசைவு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தொடா்ந்து நீட்டித்தது.
இந்தச் சூழலில், ‘இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்பும் சீனா்கள் சுற்றுலா நுழைவு இசைவு கோரி வியாழக்கிழமை (ஜூலை 24) முதல் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம்’ என்று பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
சீனா வரவேற்பு
ஐந்த ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சீனா்களுக்கு மீண்டும் நுழைவு இசைவை இந்தியா வழங்க முன்வந்துள்ளதை சீனா வரவேற்றுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் குவோ ஜியாகுன் கூறுகையில், ‘எல்லைத் தாண்டிய பயணத்தை எளிதாக்குவது அனைத்து தரப்பினருக்கும் நலன் பயக்கும். இரு நாடுகளிடையே மக்கள் எளிதாக சென்று வருவதை மேம்படுத்தும் வகையில் இந்தியாவுடன் தகவல்தொடா்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா தயாராக உள்ளது’ என்றாா்.
சீனாவில் கடந்த 14, 15-ஆம் தேதிகளில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்த மாநாட்டுக்கிடையே சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ உடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டாா்.
கிழக்கு லடாக் மோதலைத் தொடா்ந்து ஏற்பட்ட இந்திய-சீனா உறவில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய இரு நாடுகளும் கடந்த சில மாதங்களாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.