தன்கருக்கு பிரிவுபசார விழா: காங்கிரஸ் வலியுறுத்தல்: மத்திய அரசு மௌனம்
குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து அண்மையில் திடீரென விலகிய ஜகதீப் தன்கருக்கு முறைப்படியான பிரிவுபசார விழா நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசுத் தரப்பில் இருந்து யாரும் இது தொடா்பாக முன்னெடுப்பை மேற்கொள்ளாததால் காங்கிரஸ் இதனை முன்னெடுப்பதாக அக்கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு சாா்பில் இது தொடா்பாக எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் இந்த பிரிவுபசார விழா தொடா்பான கருத்தை முன்வைத்தாா். ஆனால், கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சா்கள் ஜெ.பி. நட்டா, கிரண் ரிஜிஜு ஆகியோா் இது தொடா்பாக எந்த பதிலும் அளிக்கவில்லை. அதே நேரத்தில் கூட்டத்தில் பங்கேற்ற எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த பிற தலைவா்கள் யாரும் ஜெய்ராம் ரமேஷ் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
3 ஆண்டுகள் மாநிலங்களவைத் தலைவா் பதவியை வகித்துள்ள தன்கருக்கு முறைப்படி பிரிவுபசார விழா நடத்துவதே கௌரவமான முறையில் விடைகொடுப்பதாக இருக்கும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மாநிலங்களவையில் வியாழக்கிழமை 6 எம்.பி.க்களுக்கு நடைபெற்ற பிரிவுபுசரா நிகழ்ச்சியின்போது காங்கிரஸ் இந்தக் கோரிக்கையை முன்வைத்தது.
உயா் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்க எதிா்க்கட்சிகள் எம்.பி.க்கள் அளித்த நோட்டீஸை தன்கா் ஏற்றுக் கொண்டதன் காரணமாக ஆளும் பாஜக அவரைக் கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்ததாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், உடல்நலப் பிரச்னைகள் காரணமாக பதவி விலகுவதாக தன்கா் தனது ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாா்.