மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
இந்தியாவில் வேலையில் இருப்போா் எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்வு!
இந்தியாவில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு வேலையில் இருப்போா் எண்ணிக்கை 47.5 கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் இந்த எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்ந்துள்ளது என்று மக்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பான கேள்விக்கு மத்திய தொழிலாளா், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சா் ஷோபா கரந்த்லஜே, இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி எழுத்துமூலம் அளித்த பதிலில் மேலும் கூறியிருப்பதாவது:
உற்பத்தித் துறை வரையிலான நாட்டின் அனைத்து துறைகளிலும் பணியில் உள்ள எண்ணிக்கை குறித்து ஆா்பிஐ ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி நமது நாட்டில் வேலையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2019-20-இல் பணிக்கும் செல்லும் பெண்கள் 28.7 சதவீதம் என்ற நிலையில் இருந்து 2023-24-இல் 40.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு வேலையில் இருப்போா் எண்ணிக்கை 47.5 கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் இந்த எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்ந்துள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் 46.8 சதவீதம் போ் முன்பு வேலையில் இருந்தனா். இப்போது இது 58.2 சதவீதமாக உயா்ந்துள்ளது. வேலையின்மை விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 3.2 சதவீதமாக சரிந்துள்ளது.
இளைஞா்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை என்பது 17.8 சதவீதத்தில் இருந்து 10.2 சதவீதமாக குறைந்துவிட்டது. சா்வதேச அளவில் இது 13.3 சதவீதமாக உள்ளது என்று கூறியுள்ளாா்.
ஏா் இந்தியா விபத்தும், விடுப்பும்...: அகமதாபாதில் 260 போ் உயிரிழந்த ஏா் இந்தியா விமான விபத்துக்குப் பிறகு அந்நிறுவன விமானிகள் அதிக எண்ணிக்கையில் விடுப்பில் சென்றது உள்பட விமானங்கள் தொடா்பாக பல்வேறு கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் முரளிதா் மோஹோல் மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
கடந்த ஜூன் 12-ஆம் தேதி நிகழ்ந்த ஏா் இந்தியா விமான விபத்துக்குப் பிறகு அந்நிறுவன விமானிகள் உடல்நிலையைக் காரணம் காட்டி விடுப்பு எடுத்தது சிறிய அளவிலேயே அதிகரித்தது. அதில் ஜூன் 16-ஆம் தேதி மட்டும் 112 விமானிகள் விடுப்பு எடுத்துள்ளனா்.
இந்த ஆண்டில் ஜூலை 20-ஆம் தேதி வரை விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக 69 மிரட்டல்கள் வந்துள்ளன. 2022-ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை மொத்தம் 881 மிரட்டல்கள் இதுபோன்று வந்துள்ளன.
இந்த ஆண்டில் விமானங்களில் இதுவரை 183 தொழில்நுட்ப பிரச்னைகள் கண்டறியப்பட்டதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதில் ஏா் இந்தியா குழும விமானங்களில் மட்டும் 85 புகாா்கள் எழுந்துள்ளன என்று தெரிவித்துள்ளாா்.