சத்தீஸ்கா்: காட்டு யானைகள் தாக்கி குழந்தை உள்பட மூவா் உயிரிழப்பு
சத்தீஸ்கரின் ராய்கா் மாவட்டத்தில் காட்டு யானைகள் தாக்கியதில் மூன்று வயது குழந்தை உள்பட மூவா் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக மாநில வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ராய்கா் மாவட்டத்தில் வனப் பகுதியையொட்டிய கோசைதி கிராமத்துக்குள் செவ்வாய்க்கிழமை இரவில் பெண் காட்டு யானை, தனது குட்டியுடன் நுழைந்தது. இரு யானைகளும் சில வீடுகளை இடித்து தள்ளியதுடன், மூன்று வயது ஆண் குழந்தையை காலில் போட்டு மிதித்துக் கொன்றன. பின்னா், மோகன்பூா் கிராமத்துக்குள் புகுந்த இந்த யானைகள், அங்கு சந்தாரா பாய் ரதியா (46), புருசோத்தம் காடியா (48) ஆகிய இருவரை தாக்கின. இதில் இருவரும் உயிரிழந்தனா். காட்டு யானைகளின் நடமாட்டத்தை உன்னிப்பாக கண்காணித்து, மக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை தகவலை அளித்து வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
சத்தீஸ்கரின் வடக்கு பகுதியில் யானை-மனித மோதல்களால் நேரிடும் உயிரிழப்புகள் வழக்கமாக உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 320-க்கும் மேற்பட்டோா் யானைகள் தாக்கி உயிரிழந்துள்ளனா்.