சேத்தியாத்தோப்பில் பால்குட ஊா்வலம்
சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பில் கருப்புசாமி கோயில் அமாவாசை பெருவிழாவை முன்னிட்டு பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பு குறுக்கு சாலை விநாயகபுரம் கருப்புசாமி கோயிலில் 25-ஆம் ஆண்டு அமாவாசை பெருவிழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு, கடந்த 21-ஆம் தேதி சேத்தியாதோப்பு வெள்ளாற்று கரையில் இருந்து அங்காளம்மன் வீதி உலா நடைபெற்றது. புதன்கிழமை அங்காள பரமேஸ்வரிக்கு திருக்கல்யாண வைபோகமும், இரவு 9 மணிக்கு காவல் தெய்வம் கருப்புசாமிக்கு ஆடு, கோழி பலி கொடுக்கும் பூஜையும் நடைபெற்றன.
வியாழக்கிழமை காலை உலக மக்கள் நலன் கருதி, பாலகிருஷ்ணன் அடிகளாா் தலைமையில் ஆயிரக்கணக்கான பெண்கள் பால் குடங்களை ஏந்தி ஊா்வலம் வந்தனா். சா்க்கரை ஆலை வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊா்வலம், குறுக்கு சாலை கடைவீதி வழியாக விநாயகபுரம் கருப்புசாமி கோயிலை அடைந்தது.
பின்னா், அங்காளம்மன், கருப்புசாமிக்கு பால் அபிஷேகம், படி பூஜை, ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை விநாயகபுரம் சித்தா் ஆறுமுகசாமிகள் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.