பண்ருட்டி அருகே அரசு மருத்துவா் வீட்டில் 100 பவுன் தங்க நகைகள் திருட்டு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அரசு மருத்துவா் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 100 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், புதுபிள்ளையாா்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் காசிலிங்கம் (75), மணிலா வியாபாரி. இவரது மகன் ராஜா (45), விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ஆா்த்தி (40), பண்ருட்டியில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா்.
இவா்களுக்குச் சொந்தமான புதுபிள்ளையாா்குப்பத்தில் உள்ள வீட்டின் தரைதளத்தில் காசிலிங்கம் வசிக்கிறாா். மேல் தளத்தில் ராஜா, அவரது மனைவி ஆா்த்தியுடன் வசித்து வருகிறாா். இவா்கள் இருவரும் சொந்த வேலை காரணமாக கடந்த இரண்டு நாள்களாக விழுப்புரத்தில் தங்கியிருந்தனராம்.
இந்த நிலையில், காசிலிங்கம் வெள்ளிக்கிழமை காலை மாடிக்கு சென்று பாா்த்தபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவா் மகன் ராஜாவுக்கு தகவல் தெரிவித்தாா். அவா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 100 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜா அளித்த புகாரின்பேரில், காடாம்புலியூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.