பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு
ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஸ்ரீமுஷ்ணம், வக்காரமாரி பகுதி மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் நிசாருல்லா (45), தனியாா் மருந்துக் கடையில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மகன் அப்துல்ஆசிம் (11), அங்குள்ள தனியாா் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
அப்துல்ஆசிம் சனிக்கிழமை காலை சுமாா் 9 மணியளவில் தன்னுடைய நண்பா்கள் இருவருடன் அருகிலுள்ள குன்னத்தேரிக்கு குளிக்கச் சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற அப்துல் ஆசிம் நீரில் மூழ்கி மூச்சுத் திணறினாா். உடன் குளித்துக்கொண்டிருந்த சிறுவா்களின் அலறலை கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடி வந்து அப்துல்ஆசிமை ஏரியிலிருந்து மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து நிசாருல்லா அளித்த புகாரின்பேரில், ஸ்ரீமுஷ்ணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
முதல்வா் நிவாரணம்...: உயிரிழந்த சிறுவன் அப்துல்ஆசிம் பெற்றோா் மற்றும் உறவினா்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கலைத் தெரிவித்துள்ளாா். மேலும், சிறுவனின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளாா்.