சிதம்பரம் அருகே திருநங்கை அடித்துக் கொலை
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே திருநங்கை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிதம்பரம் வட்டம், பு.முட்லூா் பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு பின்புறம் உள்ள சவுக்கு தோப்பில் ஒருவா் உடலில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக பரங்கிப்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் ஜொ்மின் லதா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று முகம் சிதைந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் கடலூரை அடுத்துள்ள கொடுக்கன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த திருநங்கை காவியா (எ) கவியரசன் (40) என்பது தெரியவந்தது. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். இவா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாா்வையிட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.