பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு
திருநங்கை கொலை: இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே திருநங்கை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிதம்பரம் வட்டம், பு.முட்லூா் பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு பின்புறம் உள்ள சவுக்கு தோப்பில் ஒருவா் உடலில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக பு.முட்லூா் கிராம நிா்வாக அலுவலா் காா்த்திகேயன் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, பரங்கிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு, இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களை பிடிக்க உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, பரங்கிப்பேட்டை காவல் ஆய்வாளா் ஜொ்மின் லதா மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்டுக் கிடந்தவா் கொடுக்கன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த திருநங்கை காவியா (எ) கவியரசன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, காவியாவின் சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.பின்னா், போலீஸாா் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சந்தேகத்தின்பேரில், பு.முட்லூா், அம்பாள் நகரைச் சோ்ந்த மணிகண்டன் மகன் வசந்த்தை (19) பிடித்து விசாரணை நடத்தினா். இதில், திருநங்கை காவியாவுடன் மது அருந்திய போது பணம் தொடா்பான பிரச்னை ஏற்பட்டதாகவும், இதனால் காவியா கழுத்தை காலால் மிதித்து கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டாராம். இதையடுத்து, வசந்தை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.