குரூப் 2, 2ஏ தேர்வு: 27-இல் கட்டண சலுகைக்கான நுழைவுத் தேர்வு
கங்கைகொண்ட சோழபுரம்: ”இராஜேந்திர சோழனின் 1,054 வது பிறந்தநாள் விழா”- கவனம் பெற்ற மோடி வருகை!
மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்த தினம் ஆடி திருவாதிரை திருவிழாவாக கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது அரசு விழாவாக கொண்டாடப்படும் என கடந்த 2023ம் ஆண்டு அரசு அறிவித்தது. அதன்படி இராஜேந்திர சோழனின் பிறந்த தினமான இன்று ஆடி திருவாதிரை திருவிழா கொண்டாப்பட்டது. இதற்காக அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இதில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், இரா.இராஜேந்திரன், எஸ்.எஸ்.சிவசங்கர், திருமாவளவன் எம்.பி, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை விழாவில் கலந்து கொள்வதற்காக வரும் 27ம் தேதி பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் வருகிறார். இதற்கான ஏற்பாட்டை மத்திய அரசு செய்து வருவதாக சொல்லப்படுகிறது. தமிழக அரசு சார்பாக இன்று விழா நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், பிரதமர் வருகைக்காக இந்த ஆண்டு முதல் முறையாக மத்திய அரசின் தொல்லியல்துறை மற்றும் பண்பாட்டு துறை சார்பில் ஆடி திருவாதிரை விழா தனியாக நடத்தப்படுகிறது.
இது குறித்து விபரம் அறிந்த சிலரிடம் பேசினோம், ``சோழ மன்னர்களில் சிறந்து விளங்கிய இராஜேந்திர சோழன், தெற்காசியா வரை படையெடுத்து வென்ற பெருமைக்குரியவர். கங்கை வரை படையெடுத்து சென்று வென்றதன் நினைவாக கங்கைகொண்டான் என்றும், கடாரம் வரை சென்று வென்றதன் புகழை போற்றும் விதமாக கடாரம் கொண்டான் என்றும் அழைக்கப்பட்டவர். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இவரால் எழுப்பப்பட்ட சோழீசுவரர் கோயில் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.

இக்கோயிலின் குடமுழுக்கை கங்கை நதியில் இருந்து புனித நீர் எடுத்து வந்து நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. கோயில் கட்டப்பட்டு 1,000 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதன் கம்பீரமும், அழகும் கொஞ்சமும் குறையவில்லை. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை தராத இடமாக கங்கை கொண்ட சோழபுரம் திகழ்வதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
பல்வேறு சிறப்புகளை பெற்ற ஆற்றல் மிகு சோழ மன்னன் இராஜேந்திர சோழன் ஆடி திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதித்தில் ஆடி திருவாதிரை நட்சத்திரம் வரும் தினத்தில் அவரது பிறந்த நாள் விழா கொண்டாப்பட்டு வருகிறது. அதன்படி1,054வது விழா இன்று கொண்டாப்படுகிறது. கோயிலுக்கு அருகாமையில் உள்ள அரசு பள்ளி திடலில் தமிழக அரசு சார்பில் விழா பந்தல் அமைத்து கொண்டாடினர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி வருகைக்காக கோயில் வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டு மத்திய அரசின் சார்பில் 5 நாட்கள் விழா கொண்டாப்படுகிறது. மோடி வருகைக்காக 27ம் தேதி வரை ஆடி திருவாதிரை விழாவை நடத்த மத்திய அரசின் சார்பில் தமிழக அரசிடம் கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆடி திருவாதிரை நட்சத்திரம் வரும் தினத்தில் தான் இதுவரை பிறந்தநாள் விழா கொண்டாப்பட்டு வருகிறது. இந்த முறையும் அதே போல் தான் நடக்கும் என தமிழக அரசு சார்பில் தெரிவித்து விட்டதாக சொல்கிறார்கள்.
மோடி வருகைக்காக ஹெலிபேடு தளம் அமைக்கப்படுகிறது. அன்றயை தினத்தில் இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சி நடக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மோடி வருகையையொட்டி பாதுகாப்புக்காக கங்கைகொண்ட சோழபுரம் பகுதி தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் ரூ.12 கோடி மதிப்பில் இராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட சோழகங்கம் என்கிற பொன்னேரி சீரமைக்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது" என்றனர்.