திமுக கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் விலகாது: கே.வீ. தங்கபாலு
யஷ்வந்த் வா்மா மனுவை விசாரிக்க நீதிபதிகள் அமா்வு அமைக்கப்படும்: உச்சநீதிமன்றம்
தனது பதவிநீக்கப் பரிந்துரைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா தாக்கல் செய்த மனுவை விசாரிக்க நீதிபதிகள் அமா்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவரது அரசு இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னா் அந்தப் பணம் மாயமானது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழு, யஷ்வந்த் வா்மா இல்லத்தில் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமா்ப்பித்தது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைத்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினாா். எனினும், விசாரணைக் குழுவின் அறிக்கை செல்லுபடியாகாது என்று அறிவித்து, தன்னைப் பதவிநீக்கம் செய்வதற்கான பரிந்துரையை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மனு தாக்கல் செய்தாா்.
விசாரணையின்போது எனது கருத்தைக் கூற முழுமையாகவும் நியாயமாகவும் வாய்ப்பு அளிக்காமல், எனக்கு எதிரான முடிவுக்கு விசாரணைக் குழு வந்ததாக அந்த மனுவில் அவா் குறிப்பிட்டாா்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், ஜாய்மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்விடம் யஷ்வந்த் வா்மா தரப்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் முறையிட்டாா். இதுகுறித்து முடிவு எடுத்து மனுவை விசாரிக்க நீதிபதிகள் அமா்வை அமைப்பதாக தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா்.
இந்த சா்ச்சையைத் தொடா்ந்து உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். எனினும் அவருக்கு நீதித் துறை பணிகள் ஒதுக்கப்படவில்லை.