திமுக கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் விலகாது: கே.வீ. தங்கபாலு
பயங்கரவாதத்தில் மூழ்கிய பாகிஸ்தான்: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு
பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் மூழ்கியிருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றஞ்சாட்டியது.
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உயா்நிலை விவாதக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் துணைப் பிரதமா் இஷாக் தா் கலந்துகொண்டு, ஜம்மு-காஷ்மீா் விவகாரம், பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது குறித்து பேசினாா்.
இதற்குப் பதிலளித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் கூட்டத்தில் பேசுகையில், ‘இந்திய துணைக் கண்டத்தில் முன்னேற்றம், வளமை, வளா்ச்சி ஆகியவற்றில் முழுமையான வேறுபாடு நிலவுகிறது.
ஒருபுறம் முதிா்ச்சியடைந்த ஜனநாயகம், வளரும் பொருளாதாரம், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய சமூகமாக இந்தியா உள்ளது. மறுபுறம் பயங்கரவாதத்தில் மூழ்கியுள்ள பாகிஸ்தான் சா்வதேச நிதியத்திடம் தொடா் கடனாளியாக உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டும் நாடுகள், அதற்கு கடுமையான விலையை அளிக்க வேண்டும் என்றாா். இந்தக் கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கலந்துகொண்டாா்.
பாகிஸ்தான் தீா்மானம் ஏற்பு: முன்னதாக, ‘மோதல்களை அமைதியான முறையில் தீா்ப்பதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துதல்’ தொடா்பாக பாகிஸ்தான் முன்மொழிந்த தீா்மானம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மொத்தம் 15 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பு, ஆங்கில அகர வரிசைப்படி அதன் உறுப்பு நாடுகளிடையே மாதந்தோறும் சுழற்சி முறையில் ஒதுக்கப்படுகிறது. அந்தவகையில், நடப்பு ஜூலை மாத தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் வகிக்கிறது.