கொல்லங்கோடு அருகே 315 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்
கொல்லங்கோடு அருகே, கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 315 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கொல்லங்கோடு அருகே வள்ளவிளை மீனவக் கிராமத்திலிருந்து, படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய்யை ஆட்டோவில் கேரளத்துக்கு கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலின்பேரில், கொல்லங்கோடு காவல் நிலைய சிறப்பு உதவியாளா் செல்லத்துரை தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கொல்லங்கோடு கண்ணநாகம் சந்திப்பில் வாகனக் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
சந்தேகத்துக்கிடமாக வந்த கேரளப் பதிவெண் கொண்ட பயணியா் ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 9 கேன்களில் 315 லிட்டா் மண்ணெண்ணெய் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
ஆட்டோவிலிருந்த ஓட்டுநா் வள்ளவிளை, பனவிளையைச் சோ்ந்த சதீஷ்குமாா் (39), ஜெயா (43) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்; ஆட்டோ, மண்ணெண்ணெய்யை நாகா்கோவில் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.