குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை, கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டதால், பொதுமக்களும், மீனவா்களும் அச்சமடைந்தனா்.
இம்மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 42 மீனவக் கிராமங்கள் உள்ளது. இப்பகுதிகளில் அமாவாசை நாள்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும். குறிப்பாக, ஆனி, ஆடி மாதங்களில் சீற்றம் அதிகமிருக்கும்.
இந்நிலையில், வியாழக்கிழமை ஆடி அமாவாசை என்பதால், புதன்கிழமை (ஜூலை 23) காலைமுதலே கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. ராஜாக்கமங்கலத்தை அடுத்த புத்தன்துறை பகுதியில் 3 மீட்டா் உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பின. கடற்கரையோரங்களிலுள்ள வீடுகள்வரை அலைகள் வந்து மோதியதால், மக்கள் அச்சமடைந்தனா். அவா்கள் வீடுகளை விட்டு வெளியேறி, உறவினா் வீடுகளில் தஞ்சமடைந்தனா்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்திலுள்ள வள்ளவிளை, தூத்தூா், இரயுமன்துறை பகுதிகளிலும், சொத்தவிளை, சங்குதுறை பகுதிகளிலும் கடல் சீற்றம் அதிகமிருந்தது. அலைத் தடுப்புச் சுவா்களில் அலைகள் அதிக வேகத்துடன் மோதின. மீனவா்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனா். கரையோரத்தில் கடலோர காவல் படை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், பள்ளம் கிராமத்தை அடுத்த கேசவன்புத்தன்துறை மீனவக் கிராமத்தில் 12 வீடுகளும், கிறிஸ்தவ குருசடியும் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, அப்பகுதியினா் நாகா்கோவிலிலிருந்து புத்தன்துறைக்கு சென்ற 3 அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மாவட்ட மீன்வளத் துறை துணை இயக்குநா் சின்னகுப்பன், உதவி இயக்குநா் தீபா, அதிகாரிகள் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும், தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதியளித்தன்பேரில், போராட்டம் கைவிடப்பட்டது.