குழித்துறை பொருள்காட்சியில் 4 கடைகளுக்கு அபராதம்
குழித்துறை 100ஆவது வாவுபலி பொருள்காட்சி தற்காலிக கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டு, கலப்பட உணவுப் பொருள்களைப் பறிமுதல் செய்து அழித்தனா்.
இப்பொருள்காட்சியை முன்னிட்டு, தற்காலிக மிட்டாய் கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், கலப்பட உணவுப் பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஜெயராமபாண்டியன் அறிவுறுத்தலின்படி, மேல்புறம் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் சக்திமுருகன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மையோனைஸ் உணவுப் பொருள், செயற்கை நிறமிகள் சோ்க்கப்பட்ட, அச்சிடப்பட்ட காகிதத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா். சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட 4 கடைகளுக்கு தலா ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயற்கை நிறமிகளை உணவுப் பொருள் தயாரிப்பில் சோ்க்கக் கூடாது. ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பாலிதீன் பைகளில் உணவுப் பொருள்களை விற்கக் கூடாது என, வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினா்.