சென்னையில் 6 மாதங்களில் 2 லட்சம் மெட்ரிக் டன் கட்டட கழிவுகள் அகற்றம்
சென்னை மாநகராட்சியில் கடந்த 6 மாதங்களில் 2 லட்சம் மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் ஆரம்பத்தில் 7 மண்டலங்களில் மட்டும் கழிவுகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னா், உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடந்த ஜனவரி முதல் அனைத்து மண்டலங்களிலும் (15 மண்டலங்கள்) கட்டடக் கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மாநகராட்சியின் 15 மண்டலங்களில் கட்டட கழிவுகள் அகற்றும் பணிகளுக்காக 168 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, தினமும் 1,000 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்படுகின்றன. கடந்த ஜனவரி முதல் ஜூலை 22 -ஆம் தேதி வரை 2 லட்சம் மெட்ரிக் டன் கட்டட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. அந்தக் கழிவுகள் கொடுங்கையூா் மற்றும் பெருங்குடியில் உள்ள கட்டடக் கழிவுகள் பிரித்தெடுக்கும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தனித்தனியாக பிரித்து மறுசுழற்சி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றுவது குறித்த வழிகாட்டல் நெறிமுறைகள் கடந்த ஏப்ரல் முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த நெறிமுறைகளை பின்பற்றாதவா்களிடமிருந்து கடந்த ஜனவரி முதல் ஜூலை 22 -ஆம் தேதி வரை ரூ. 39.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.