"அதிமுக-வை பாஜக விழுங்கிய கதை" - பட்டியலிடும் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆளூர்...
தேர்தல் வெற்றிக்குப் பிறகு கூட்டணி ஆட்சி குறித்து முடிவு: தமிழிசை பேட்டி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷாவும் எடப்பாடி பழனிசாமியும் கலந்துபேசி முடிவெடுப்பார்கள் என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியது:
"அரசு செலவில் பல கோடி ரூபாயை திமுக தமது தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவதுபோல் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் உள்ளது. கடந்த 4 ஆண்டில் செய்ய முடியாததை 45 நாளில் செய்வதாகக் கூறுகின்றனர். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திலும் ஊழல் உள்ளது. சான்றிதழ் வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதை அறிய முடிகிறது. தவிர, மனு அளிக்க வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்படுவதில்லை என்பது வேதனை அளிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வருவதை மிகப்பெருமையாக கருதுகிறோம். கங்கை கொண்ட சோழபுரத்தின் பெருமையை உணர்த்த பிரதமர் வர வேண்டி உள்ளது. பிரதமர் வருகை பாஜகவினருக்கு புத்துணர்ச்சி தரும்.
காமராஜர் உள்பட அனைத்து தலைவர்களும் இகழப்பட வேண்டும் என்பதும் கருணாநிதியை மட்டுமே பெருமையாகக் கருத வேண்டும் என்பதுதான் திமுகவினர் நோக்கம்.
சீமான், விஜய் ஆகியோரை கூட்டணிக்கு அழைப்பது எடப்பாடி பழனிச்சாமியின் நிலைபாடு. பாஜக, அதிமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, தெளிவாக உள்ளது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தேர்தல் வெற்றிக்குப் பிறகு கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் கலந்து பேசி முடிவெடுப்பார்கள்.
ஆனால் திமுக கூட்டணிதான் தெளிவில்லை. திருமாவளவன், கார்த்தி சிதம்பரம், செல்வப் பெருந்தகை, கம்யூனிஸ்ட் தலைவர்கள் திமுக கூட்டணியில் தங்களுக்கு எத்தனை இடம் வேண்டும் என இப்போதே பேசத் தொடங்கிவிட்டனர்.
குரூப் 4 தேர்வில் குளறுபடி இருப்பதாக அதிமுகபோல் பாஜகவுக்கும் கருத்து உள்ளது. தொடர்ந்து தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். இதற்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
துணை குடியரசுத்தலைவர் ராஜிநாமா குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை. தமிழகத்தைச் சேர்ந்தவர் அடுத்த துணை குடியரசுத்தலைவராக வர வாய்ப்புள்ளதா என கூறக்கூடிய இடத்தில் நான் இல்லை" என்றார்.