தாம்பரதத்தில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை: ஆக.5 -இல் முதல்வா் திறந்து வைக்கிற...
சென்னையில் 4 இடங்களில் விரைவில் ஏசி பேருந்து நிறுத்தம்! எங்கெங்கு?
சென்னையில் புதிதாக நான்கு இடங்களில் விரைவில் குளிர்சாதன வசதியுடன் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை மாநகராட்சி வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ரூ.8 கோடியில், இந்த திட்டம் நிறைவேற்றப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் நான்கு இடங்கள் என்றால், அது கொளத்தூர், ராயபுரம், வால் டாக்ஸ் சாலை, பெரம்பூர் ஆகியவற்றில்தான் இந்த வசதி விரைவில் வரவிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது போல, சென்னையின் நான்கு இடங்களில், தலா 78 பேர் அமரும் வகையில் கொளத்தூர், ராயபுரம், வால் டாக்ஸ் சாலையில் பேருந்து நிறுத்தங்களும், 54 பேர் அமரும் பேருந்து நிறுத்தம் பெரம்பூரிலும் அமைக்கப்படவிருக்கிறது. இதனுடன் இருபாலருக்கும் தனித்தனி கழிப்பறைகள், குடிநீர் வசதியுடன் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பேருந்து நிறுத்தங்களைக் கட்டி முடித்து ஒப்படைக்க, ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகர வளர்ச்சிக் குழுமம் நான்கு மாத கால அவகாசம் கொடுத்துள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடை வெயில் காலங்களை கருத்தில் கொண்டு மக்களின் நலன் கருதி இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது.
குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து நிறுத்தங்கள், தமிழகத்துக்கு ஒன்றும் புதிதல்ல என்பதும், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த வசதி பத்து ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வரப்பட்டு, காலப்போக்கில் அதனை பராமரிக்காமல் விட்டுவிட்டதால், அந்த திட்டம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த முறையும் அதுபோல பராமரிக்காமல் விட்டுவிடக் கூடாது என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.