Doctor Vikatan: டிரெண்டாகும் ஃப்ரெஷ் மஞ்சள் சமையல்.. எந்த அளவு ஆரோக்கியமானது?
Doctor Vikatan: சமீபகாலமாக நிறைய வீடியோக்களில், ரீல்ஸில் மஞ்சள் கிழங்கை வைத்துச் செய்கிற உணவுகளைப் பார்க்கிறோம். ஃப்ரெஷ்ஷான மஞ்சளை வைத்து ஊறுகாய் முதல் ஜூஸ் வரை ஏதேதோ தயாரிக்கிறார்கள். மஞ்சளை தூளாக உபயோகிக்கிறபோது மிகச் சிறிய அளவுதான் உபயோகிக்கிறோம். அப்படியிருக்கையில் மஞ்சள் கிழங்கை இவ்வளவு அதிகமாக உபயோகிக்கலாமா.... எந்த மஞ்சளை, எப்படி உபயோகிக்க வேண்டும்?
பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்.
காலங்காலமாக சமையலில் மஞ்சளை எப்படிப் பயன்படுத்துவோமோ, அப்படிப் பயன்படுத்துவதுதான் சிறப்பானது. சாம்பார், ரசம் உள்ளிட்ட உணவுகளைத் தயாரிக்கும்போது எப்படிச் சேர்ப்போமோ, அதுவே போதுமானதுதான்.
பாலில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் காய்ச்சிக் குடிக்கலாம். 'தங்கப்பால்' (கோல்டன் மில்க்) எனப்படும் இது வெளிநாடுகளில்கூட பிரபலமாகிவிட்டது. இப்படியும் மஞ்சளைப் பயன்படுத்தலாம். மஞ்சளில் ஊறுகாய் தயாரிப்பது பல மாநிலங்களிலும் வழக்கத்தில் இருக்கிறது. சமீபகாலமாக அது மிகவும் டிரெண்டாகி வருகிறது. ஊறுகாய் என்கிற போது இஞ்சி, மா இஞ்சி, மாங்காய் போன்ற ஏதேனும் ஒன்றை பிரதானமாக வைத்துக் கொண்டு, கூடவே சிறிது மஞ்சள் கிழங்கும் சேர்த்துச் செய்யலாம். இப்படித் தயாரிக்கிறபோது நாம் எடுத்துக்கொள்ளும் மஞ்சளின் அளவு குறைவாகத்தான் இருக்கும்.
மஞ்சள் நல்லது என்பதற்காகவோ, சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களைப் பார்த்தோ, மஞ்சளை அளவுக்கதிகமாக எடுப்பது நிச்சயம் தவறானதுதான். அப்படி எடுக்கும்போது வயிற்றுப் புண், குடல் அழற்சி போன்ற பிரச்னைகள் வரலாம்.

மருத்துவ குணம் கொண்ட உணவுப்பொருள் என்றாலும் அளவோடு எடுக்கும்போதுதான் அதன் நற்பலன்கள் முழுமையாகச் சேரும். மஞ்சளைப் பொறுத்தவரை, அதை அளவோடு எடுக்கும்போது, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது போன்ற பல நன்மைகளைத் தரும். நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். கபத்தை நீக்கக்கூடிய தன்மையும் அதற்கு உண்டு.
புதுமையாகச் சமைக்கிறோம் என்ற பெயரில் இதுபோன்ற மருத்துவ குணம் வாய்ந்த எந்தப் பொருளையும் அதன் தன்மை தெரியாமலும், அது செரிமானத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தெரியாமலும் முயற்சி செய்ய வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.