கடந்த 100 ஆண்டுகளின் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தும் அதிர்ஷ்டமில்லாத போலண்ட்!
மீண்டும் வருகிறார் ஹாரி பாட்டர்..! இணையத் தொடரின் படப்பிடிப்பு துவக்கம்!
உலகப் புகழ்பெற்ற ”ஹாரி பாட்டர்” கதைகளின், இணையத் தொடர் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜே.கே. ரௌலிங் எழுதிய ஹாரி பாட்டர் நாவல்களை மையமாகக் கொண்டு உருவான 8 பாகங்களாக வெளியான ”ஹாரி பாட்டர்” திரைப்படங்களுக்கு உலகளவில் ரசிகர் பட்டாளம் ஏராளம்.
அந்தக் கதைகளின் நாவல்கள் ஏராளமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட நிலையில், 8 படங்களும் சர்வதேச அளவில் மிகப் பெரியளவில் வெற்றியடைந்தன.
90-ஸ் மற்றும் 2-கே கிட்ஸ்களின் குழந்தைப் பருவத்தின் முக்கிய அங்கமாக விளங்கிய ஹாரி பாட்டர் கதைகள் தற்போது இணையத் தொடராக உருவாகுகின்றன.
எச்.பி.ஓ. நிறுவனத்தின் தயாரிப்பில், புதிய நடிகர்களுடன், நாவல்களிலிருந்து இன்னும் ஆழமான கதைத் தழுவலுடன் இந்த இணையத் தொடரானது உருவாகவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, எச்.பி.ஓ. நிறுவனம் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ஹாரி பாட்டர் படங்களின் முதல் பாகத்தில் இடம்பெற்ற பிரபல வசனமான, “ஃபர்ஸ்ட் இயர்ஸ் ஸ்டெப் ஃபார்வர்ட்” எனக் குறிப்பிட்டு, படப்பிடிப்பு துவங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய இணையத் தொடரில், ஹாரி பாட்டர், ஹெர்மாயினி கிரேஞ்சர், ரான் வீஸ்லே ஆகிய முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் டொமினிக் மெக்லாஃப்லின், அரபெல்லா ஸ்டாண்டன் மற்றும் அலாஸ்டெயிர் ஸ்டௌட் ஆகியோர் நடிக்கின்றனர்.
‘ஸக்ஸெஷன்’ எனும் பிரபல இணையத் தொடரின் இயக்குநர் மார்க் மைலாட் இயக்கும் இந்தப் புதிய ஹாரி பாட்டர் இணையத் தொடர் வரும் 2027-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.