ஐபோன் 17 தயாரிப்பு இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு!
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபோன் 17 தயாரிப்பு இந்தியாவில் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக சோதனை தயாரிப்பு நடக்கும் என்றும், அதன் பிறகு அடுத்த மாதம் மொத்த தயாரிப்பு தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களை தயாரித்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம், சீனாவில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்துள்ளதன் மூலம் இந்தத் தகவல் உறுதியாகியுள்ளது.
எனினும், முதலில் சோதனை தயாரிப்பு மட்டுமே நடைபெறும் என்றும் அதன் பிறகே மொத்த தயாரிப்புப் பணிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தொழில் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள உதிரி பாகங்களும் குறைந்த அளவிலானவையே என்பதால், இதில் சோதனை தயாரிப்புகளை மட்டுமே மேற்கொள்ள முடியும் எனவும் கூறுகின்றனர்.
சோதனை தயாரிப்பு முடிந்து, அடுத்த மாதத்தில் சீனாவிலும் இந்தியாவிலும் ஐபோன் 17 மொத்த தயாரிப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 17 வெளியாவது எப்போது?
ஐபோன் 17 ஸ்மார்ட்போனானது செப்டம்பர் முதல் வாரத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 2வது வாரத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில், செப்டம்பர் 8-10 தேதிகளில் ஏதேனும் ஒன்றில் அறிமுகமாகலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | விவோ எக்ஸ் 300 கேமராவின் சிறப்புகள் என்னென்ன?