மதுரை: `அரசு மருத்துவமனைக்கு வரும் 1000 பேருக்கு தினமும் மதிய உணவு!' - அசத்தும் நட்சத்திர நண்பர்கள்
அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழைகளுக்கு கடந்த 500 நாள்களாக தினமும் 1000 பேருக்கு மதிய உணவு வழங்கி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் நிறுவனர் குருசாமி.

தென் தமிழகத்தின் பெரிய மருத்துவமனையான மதுரையிலுள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள். அப்படி வருகின்றவர்கள், அவர்களுக்கு உதவியாக வருகின்றவர்கள் மதிய உணவுக்கு சிரமப்படக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் தினமும் உணவு, குடிநீர், பழங்கள் வழங்கி அரிய பணியை செய்து வருகிறது ஸ்டார் குருசாமி வழிநடத்தும் நட்சத்திர நண்பர்கள் அமைப்பு.
இந்த உணவு விநியோகத்தை எந்தவொரு தொய்வும் இல்லாமல் சிறப்பாக தயாரித்து, தன்னார்வலர்கள் மூலம் முறையாக தினமும் விநியோகத்து வருகிறார்கள். 500 -வது உணவு வழங்கும் தினத்தில் மக்களுக்கு உணவுடன் ஆடைகளும் சேர்த்து வழங்கி மக்களை மகிழ்ச்சிப்படுத்தினர்.
இதுமட்டுமின்றி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரை மாநகருக்குள் செல்லும் வைகை ஆற்றில் நீரோட்டத்தை தடுத்து ஆபத்தை உண்டாக்கும் ஆகாயத்தாமரைகளை இயந்திரம் மூலம் அகற்றி வருவதையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
மேலும், வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதையும், குப்பைகள் கொட்டுவதையும் தடுக்கும் வகையில் ஆற்றின் இரு கரைகளிலும் 350 கண்காணிப்பு கேமிராக்களை நிறுவி கண்காணித்தும் வருகின்றனர்.

அரசு மருத்துவமனைக்கு வருபவருக்கு தினமும் உணவு வழங்குவதோடு ஏழைப் பெண்கள், ஆதரவற்றோர், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் செய்ய உதவுவது, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது என பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து மக்களின் வாழ்த்துகளை இந்த அமைப்பு பெற்று வருகிறது.