ஏன் இந்த அநீதி? 3 ஆண்டாக அணியில் இருந்தும் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு மறுக்கப்படும் வா...
ரூ.29 லட்சம் வரி! தெருவோர வியாபாரிகளுக்கு வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்!
கர்நாடக மாநிலம் பெங்களூரில், சாலையோர காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் பலருக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்துமாறு வருமான வரிதுறையிடமிருந்த வந்திருக்கும் நோட்டீஸ் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆண்டு முழுவதும் ரூ.40 லட்சம் வரை, யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கூறி ஒரு தெருவோர வியாபாரிக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, தெருவோர வியாபாரிகளுக்கு இதுபோன்ற வரியிலிருந்து விலக்கு வழங்குமாறும், இல்லாவிட்டால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
பெங்களூரில் உள்ள தெருவோர வியாபாரிகள் பலரும், யுபிஐ மூலம் பணம் பெறுவதை நிறுத்திவிட்டு, கையில் ரொக்கமாகவே வாடிக்கையாளர்கள் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதால், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெங்களூர் வரித்துறை அலுவலகத்திலிருந்து ரூ.29 லட்சம் வரி செலுத்துமாறு காய்கறி வியாபாரி ஒருவருக்கு நோட்டீஸ் வந்திருப்பதால், என்ன செய்வது என்று தெரியாமல் கலக்கத்தில் உள்ளார்.
இது குறித்து ஏஎன்ஐ செய்தி தெரிவிப்பது என்னவென்றால், காய்கறி மற்றும் பழங்களுக்கு ஜிஎஸ்டி விதிமுறை எதுவும் இல்லை. இதுவரை நான் ஜிஎஸ்டியில் பதிவும் செய்யவில்லை. ஆனால், ஆண்டு முழுவதும் ரூ.40 லட்சத்துக்கு வியாபாரம் செய்திருப்பதாகக் கூறி ரூ. 29 லட்சம் வரி செலுத்துமாறு நோட்டீஸ் வந்துள்ளது. இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டால், இந்த பணம் முழுவதும் காய்கறி விற்பனையால் மட்டுமே வந்தது என நிரூபித்தால் நோட்டீஸ் திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்திருக்கிறார்களாம்.
தெருவோர வியாபாரிகள் பலவிதமான அபராதங்கள் செலுத்துவதாகவும், வருவாயில் பெரும்பகுதி பொருள்கள் வாங்குவது போன்ற பல விதங்களில் செலவாவதாகவும், இதுபோன்ற பெரிய தொகைகளை தெருவோர வியாபாரிகள் எவ்வாறு செலுத்துவார்கள் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
சிறு வியாபாரிகளிடமிருந்து ஜிஎஸ்டி என்ற பெயரில் வரியைப் பிடுங்குவது நல்லதல்ல என்று மாநில பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் வியாபாரிகள் யுபிஐ பரிவர்த்தனையை நிறுத்திவிட்டு ரொக்கமாக வாங்குகிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு போன்றவர்களுக்கு அரசு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.