"அதிமுக-வை பாஜக விழுங்கிய கதை" - பட்டியலிடும் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆளூர்...
விமான விபத்து: பிரிட்டன் வந்த இரு உடல்கள் மாறிவிட்டன! உறவினர்கள் புகார்!
ஏர் இந்தியா விபத்தில் பலியான பிரிட்டனைச் சேர்ந்த இருவரின் குடும்பத்தினர் தங்களுக்கு கிடைத்த உடலுடன் டிஎன்ஏ பரிசோதனை பொருந்தவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணித்த நிலையில், ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தார்.
விமானத்தில் 12 ஊழியர்கள், பயணிகளில் இந்தியாவைச் சேர்ந்த 169 பேர், 53 பிரிட்டன் நாட்டினர், 7 போர்த்துகீசிய நாட்டினர் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஒருவர் பயணித்திருந்தனர்.
இதில், பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் மட்டும் உயிர்பிழைத்த நிலையில், மற்ற 241 பேரின் உடலும் அடையாளம் தெரியாத வகையில் எரிந்தது.
இதனால், அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அனைத்து உடல்களின் மாதிரிகளும் எடுக்கப்பட்டு, அவர்களின் உறவினர்களின் மாதிரிகளுடன் ஒப்பிட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, அனைத்து உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்களின் உடல்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்ட நிலையில், இரண்டு பேரின் உடல்கள் மாறி வந்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து அவர்களின் வழக்கறிஞர் தெரிவித்திருப்பதாவது:
”இந்தியாவில் இருந்து 24 முதல் 26 உடல்கள் வந்தன. இதையடுத்து, பிரிட்டனில் மீண்டும் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இரண்டு சடலங்கள் மட்டும் உறவினர்களின் மாதிரிகளுடன் பொருந்தவில்லை. அவர்கள் குடும்பத்தினரின் சடலத்துக்கு பதிலாக வேறு சடலம் அனுப்பப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக செய்தியை வெளியிடவில்லை.