பாபநாசம் பட பாணியில் மகாராஷ்டிரத்தில் நடந்த கொலை! காட்டிக் கொடுத்த டைல்ஸ்!
பாபாநாசம் படத்தில், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, யாருக்கும் தெரியாமல் பூமிக்கு அடியில் புதைக்கப்படும் சம்பவத்தையே விஞ்சும் வகையில், மகாராஷ்டிரத்தில், தனது கணவரைக் கொன்று வீட்டுக்குள் குழிதோண்டி புதைத்திருக்கிறார் மனைவி.
மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டத்தில், விஜய் சவான் (35) கடந்த 15 நாள்களாகக் காணாமல் போயிருக்கிறார். அவரது மனைவி கோமல் சவான் (28), கணவர் ஊருக்குச் சென்றிருப்பதாகக் கூறியிருக்கிறார். ஆனால், இதில் விஜய் குடும்பத்தாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
திங்கள்கிழமை காலை, விஜய் சகோதரர், கோமல் வீட்டில் இல்லாதபோது, வீட்டுக்குச் சென்று, பூட்டைத் திறந்து வீட்டை சோததித்துள்ளார். அப்போது வேறு எந்த ஒரு விஷயமும் சந்தேகத்தை ஏற்படுத்தாத நிலையில், தரையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் மூன்று டைல்ஸ்கள் மாற்றப்பட்டிருப்பதைக் கண்டறிந்தார்.
இது குறித்து அவருக்கு சந்தேகம் எழவே, உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.
விரைந்து வந்த காவலர்கள், அவ்விடத்தில் பள்ளம் தோண்டி பார்த்தபோது, கருப்பு நிற பையில், விஜய் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது.
அப்போதுதான், கடந்த இரண்டு நாள்களாக கோமல் மற்றும் பக்கத்து வீட்டில் வாழ்ந்து வந்த மோனு என்ற இருவரும் காணாமல் போயிருக்கும் தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.
பிறகு, காவல்துறை நடத்திய விசாரணையில், கோமல், தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து கணவர் விஜயை கொலை செய்திருக்கலாம், மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக இருவரும் சேர்ந்து வீட்டுக்குள்ளேயே பள்ளம் தோண்டி உடலை புதைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
விஜய்க்கு அண்மையில், காப்பீட்டுத் தொகை 6 லட்சம் வந்ததாகவும், அவரது வங்கியில் ஏற்கனவே ரூ.3 லட்சம் இருந்துள்ளதும், இந்தப் பணத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.