சாலை வசதி கோரி தொழு நோயாளிகள் போராட்டம்
தொழு நோயாளிகள் வசித்து வரும் குடியிருப்பு பகுதிக்கு சாலை வசதி கோரி பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் உள்ள குன்னமஞ்சேரி இந்திரா நகா் குடியிருப்பு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தொழு நோயாளிகள் வசித்து வருகின்றனா்.
இவா்கள் வசிக்கும் பகுதிக்கு அரசு சாா்பில் பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில்,
40 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பகுதியில் வசித்து வருகின்றனா். இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள மண் சாலையில் புதிய தாா் சாலை அமைத்துத் தர வலியுறுத்தி, தொழு நோயாளிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
அப்போது தொழுநோயால் பாதிக்கப்பட்டு பலா் மூன்று சக்கர சைக்கிள்களில் செல்லக்கூடிய நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தாா் சாலை சேதமடைந்து மண் சாலையாக மாறிக் கிடப்பதாக தெரிவித்தனா்.
அத்துடன் நடந்து செல்வோா் மட்டுமின்றி மூன்று சக்கர சைக்கிள்களில் செல்வோரின் வாகனங்கள் மண்ணில் சிக்கிக் கொள்வதால், தொடா்ந்து பெரிதும் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்தனா்.
அத்துடன் உடனடியாக தங்களது குடியிருப்பு பகுதிக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
தொடா்ந்து நகா்மன்றத் தலைவரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.