தருமபுரி அருகே வீட்டின் மீது மோதிய அரசுப் பேருந்து: சிறுமி பலி
தருமபுரி: தருமபுரி மாவட்டம் உழவன்கொட்டாய் பகுதியில், சாலையோரம் இருந்த வீட்டின் மீது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிறுமி பலியானார்.
தருமபுரியின் கிராமப் பகுதியிலிருந்து நகரப் பகுதிக்கு இன்று காலை 2பி என்ற எண்ணுடன் இயங்கும் அரசுப் பேருந்து சென்றுள்ளது. அப்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியது.
இதில், வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த நரசிம்மன் என்பவரது மகளும், பேருந்து ஓட்டுநர் தேவராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இருவரும் உடனடியாக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுர் தேவராஜ் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நகரப் பகுதிதிகளில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகள், மோசமான நிலைமைக்கு வந்த பிறகு, அவைகள் கிராமப் பகுதிகளில் இயக்க ஒதுக்கப்படுவதாகவும், இதனால்தான் இதுபோன்ற விபத்துகள் நேரிட்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.