தாம்பரதத்தில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை: ஆக.5 -இல் முதல்வா் திறந்து வைக்கிற...
துருக்கியில்.. ரஷியா - உக்ரைன் இடையில் 3-ம் சுற்று அமைதிப்பேச்சு!
துருக்கி நாட்டில் ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையில், 3-ம் சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில், கடந்த 2022-ம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகின்றது. இந்தப் போரில், இருதரப்பும் ஏராளமான உயிர் மற்றும் பொருள் சேதங்களைச் சந்தித்துள்ளன.
இந்நிலையில், சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரை நிறுத்த ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளின் முக்கிய அதிகாரிகள் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்தப் பேச்சுவார்த்தைகளின் 3-ம் சுற்று இன்று (ஜூலை 23) மாலை துவங்குவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு, மாஸ்கோவில் இருந்து வருகைத் தரும் குழுவுக்கு, ரஷிய அதிபரின் உதவியாளர் விளாதிமீர் மெடின்ஸ்கி தலைமைத் தாங்குகிறார். இதேபோல், உக்ரைன் நாட்டு குழுவுக்கு, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ருஸ்டெம் உமெரோவ் தலைமைத் தாங்குகிறார்.
கடந்த மே 16 மற்றும் ஜூன் 2 ஆகிய தேதிகளில், இருநாட்டு அதிகாரிகள் மேற்கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளின் மூலம், இருதரப்பும் தாங்கள் சிறைப்பிடித்த பிணைக் கைதிகளை விடுவித்தனர்.
முன்னதாக, உடனடியாக இருதரப்புக்கும் இடையில் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென, போப் பதினான்காம் லியோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தம் செய்ய தயார் என அறிவித்த போப் பதினான்காம் லியோ, ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் வாடிகன் நகரத்துக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இலங்கையில் பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!