நம்ப முடியாத விலைக்குறைப்பு! ரூ. 15,000க்கு கிடைக்கும் ஒன்பிளஸ் பேட் லைட்!
முதல்வர் எப்போது வீடு திரும்புவார்? - மு.க. அழகிரி பேட்டி
முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமாக இருக்கிறார், அடுத்த 2 அல்லது 3 நாள்களில் வீடு திரும்புவார் என்று அவரது சகோதரர் மு.க. அழகிரி கூறியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல்வர் ஸ்டாலின் 3 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவர் அங்கிருந்தே அலுவல் பணிகளை கவனித்து வருகிறார்.
கடந்த ஜூலை 15 ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகள் குறித்து இன்று காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரர் மு.க. அழகிரி நேற்று சென்னை அப்போலோ மருத்துவமனை சென்று முதல்வரிடம் நலம் விசாரித்த நிலையில் இன்றும் மருத்துவமனை சென்றார்.
மருத்துவமனையைவிட்டு வெளியே வந்த மு.க. அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "முதல்வர் நலமாக இருக்கிறார். அடுத்த 2 அல்லது 3 நாள்களில் வீடு திரும்புவார்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"முதல்வரின் சகோதரர் மு.க. முத்து மறைந்த அன்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒருநாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்திருக்கிறார். அடுத்த நாள் காலையில் நடைப்பயிற்சி சென்றபோது அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டிருக்கிறது. முதலமைச்சர் உடல்நலன் நன்றாக உள்ளது. அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இன்று பரிசோதனை முடிவுகள் வெளிவரும். முதல்வர் வீடு திரும்புவது குறித்து மருத்துவமனை தரப்பில் அறிவிப்பார்கள்" என்றார்.