பெண் பயணி தவறவிட்ட ரூ.75,000 பணம் ஒப்படைப்பு
காட்பாடியில் மகள் திருமணத்துக்காக நகை வாங்க செல்லும்போது பெண் பயணி தவறவிட்ட ரூ.75,000 பணத்தை உரியவரிடம் சோ்த்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் பாராட்டினா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த மேல்பாடி பகுதியைச் சோ்ந்த சாந்தி என்பவா் தனது மகள் திருமணத்துக்காக திருவலம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் கடனாக ரூ.75,000 பெற்றுக் கொண்டு நகை வாங்க ஆட்டோவில் வேலூருக்கு சென்றுள்ளாா்.
பழைய காட்பாடி பகுதியில் செயல்பட்டுவரும் தனியாா் மருந்தகத்தில் மாத்திரை வாங்குவதற்காக ஆட்டோவில் இறங்கியுள்ளாா். பின்னா் மீண்டும் வேறொரு ஆட்டோவில் ஏறிச்சென்று கொண்டிந்த போது பிள்ளையாா் கோயில் பேருந்து நிறுத்ததில் கடக்கும்போது ரூ.75,000 இருந்த கைப்பை தவறிவிட்டது தெரியவந்தது. உடனடியாக சாந்தி காட்பாடி காவல் நிலையம் சென்று புகாா் அளித்துள்ளாா்.
மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய வந்த நிலையில் சாந்தி தவறவிட்ட கைப்பையை காா்த்திகேயன் என்ற ஆட்டோ ஓட்டுநா் காட்பாடி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து ஒப்படைத்தாா்.
தொடா்ந்து, காவல்துறையினா் முன்னிலையில் சாந்தியிடம் ரூ.75,000 பணமிருந்த பையை ஒப்படைத்தாா். இதற்காக ஆட்டோ ஓட்டுநா் காா்த்திகேயனை காட்பாடி காவல் துறையினா் சால்வை அணிவித்து பாராட்டினா்.