ராஜஸ்தான்: பள்ளிக்கட்டிடம் இடிந்து 4 குழந்தைகள் பலி; இடிபாடுகளில் 17 பேர் காயம்.. என்ன நடந்தது?
ராஜஸ்தான் மாநிலம் ஜலவார் மாவட்டத்தில் உள்ள மனோஹர் பிப்லோதி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த அரசு பள்ளிக்கட்டிடம் இன்று காலையில் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழுந்தபோது 40 மாணவர்கள், குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கட்டிடத்திற்குள் இருந்தனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இன்று காலை பள்ளி தொடங்கி மாணவர்கள் வகுப்பறையில் இருந்தபோது திடீரென கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதை பார்த்த உள்ளூர் மக்கள் ஓடி வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது வரை 4 குழந்தைகள் இறந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. 17 குழந்தைகள் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட போலீஸ் அதிகாரி அமித் குமார் தெரிவித்துள்ளார். 4 ஜே.சி.பி இயந்திரங்கள் உதவியுடன் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவரும் வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகிறார்.
மாநில கல்வி அமைச்சர் மதன் இது தொடர்பாக அளித்த பேட்டியில்,''காயம் அடைந்த குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சை கொடுக்க ஜில்லா பரிஷத் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு இருக்கிறேன். சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.
இடிந்து விழுந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. இது தொடர்பாக அக்கிராம மக்கள் பல முறை புகார் அளித்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அக்கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த சில நாள்களாக ராஜஸ்தானில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மேற்கூரை இடிந்து விழுந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.