செய்திகள் :

வானத்திலிருந்து ஜல்லிக்கற்கள் அதிக விசையில் எங்கள்மேல் விழுவதைப் போலிருந்தது! - திசையெல்லாம் பனி- 8

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

நான்கைந்து தினங்களாக மலைகள், மணற்பரப்புகளுக்கு நடுவே தங்கியிருந்துவிட்டு, அன்று தோட்டத்தில் பறவைகளின் கீச்சொலிகளைக் கேட்டுக் கண்விழித்தது அந்த முழுப்பயணத்திலேயே சிறப்பான தருணங்களில் ஒன்று. ஆனால் எழுந்தது முதலே சோர்வாக இருந்தது. மிகப் பொறுமையாகத்தான் தயாரானோம்.


லே நகரிலிருந்து எங்களுடன் இருவர் இணைந்துகொண்டனர். எதிர் கூடாரத்தில் அவர்கள் யூடியூபர்களைப் போல ட்ரைபாட் சகிதம் நின்று தங்கள் பயண அனுபவங்களைப் படம்பிடித்துக்கொண்டிருந்தனர். மற்ற அனைத்துக் கூடாரங்களும் மூடியே இருந்தன. அன்றைக்கு உணவு உண்ணும் இடம்கூட எந்தச் சலசலப்புமின்றி அமைதியாகவே இருந்தது. அணியினர் பலரும் உற்சாகமின்றியிருந்தனர்.


‘இன்றைக்குக் கொஞ்சம் தாமதமாகக் கிளம்பலாமா, ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கொண்டு போகலாமா’ என்று பேச்சுகள் அடிபடுவதைக் கவனித்த பார்த், எங்களை உடற்பயிற்சிக்கு அழைக்க, நாங்கள் ஒரே குரலில் இன்றைக்கு நிச்சயம் முடியாது என மறுத்தோம்.

‘இப்படிச் சலித்துக்கொண்டால் இன்றைய பயணம் கடினமாக இருக்கும். இன்று வாட்டர் கிராஸ்ஸிங், ஆஃப்ரோடிங் இரண்டுமே உண்டு. முழங்கால் அளவுக்குத் தண்ணீர் போவதாக எனக்குத் தகவல் வந்துள்ளது’ என்றார் சஷாங்க்.


வேண்டா வெறுப்பாக பார்த் சொன்ன சில வார்ம்அப்களை செய்துவிட்டுக் கிளம்பினோம். அந்தத் தோட்டக்காரரிடம் அங்கிருப்பதைப் போன்ற பெரிய அளவிலான சூரியகாந்திப் பூக்களைத் தரக்கூடிய விதைகள் எங்கள் தோட்டத்திற்கு வேண்டுமென்று கேட்டோம். சஷாங்க் அந்த விதைகளை வாங்கி எங்கள் முகவரிக்கு அனுப்பிவைப்பதாகச் சொன்னார். நானும் நவீனும் எல்லா நாள்களையும் போல அன்றும் காலை நடையை முடித்துவிட்டு தயாரானோம்.

முதல் நாளிலிருந்தே அணியிலிருந்தவர்கள் அதிகம் பேசி எதிர்பார்த்தது வாட்டர் கிராஸ்ஸிங்கைதான். சாலையைப் பிளந்து கொண்டுபோகும் ஆற்றுவெள்ளத்தை பைக்கில் கடப்பதில் பைக்கர்களுக்கு தனிப் பிரியம். அலாதி சந்தோஷம். அன்று நல்ல சந்தர்ப்பமாக இருக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அதுவும் ஓரிடத்தில் முந்நூறு அடி தூரத்திற்கு அருவியைப் போல நீரோட்டம் இருக்கும் என எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது. இவை எதுவும் எனக்குப் பரவசத்தைத் தரவில்லை மாறாகப் பயத்தைதான் தந்தன.

ஏற்கெனவே இரண்டு மூன்று வாட்டர் கிராஸிங்கை பார்த்திருக்கிறோம் என்றாலும் அவை எளிதில் கடக்கக்கூடியதாக இருந்தது. இன்றைக்குச் சாவலான பயணம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. வாட்டர் கிராசிங்கின்போது விபரீதங்கள் நேராமல் கடந்தால் போதும் என்பதே பயணம் முழுக்க என்னுடைய நினைப்பாக இருந்தது. காலை முழுவதும் வழியில் காணும் எதிலும் மனம் லயிக்காமல், எண்ணங்களால் நிறைந்திருந்தது என் மேல் மாடி.

ஒன்றரை மணி நேரத்தில் அந்த இடத்திற்குச் சென்று சேர்ந்தோம். சஷாங்க் பயமுறுத்தியதைப் போலச் சீறிக்கொண்டெல்லாம் நீர் பாயவில்லை. ஆஃப் சீசன் குற்றால அருவியைப்போல நீர் வரத்து மிக சுமாராகவே இருந்தது. இதற்கா இத்தனை பில்ட்அப் கொடுத்தார் என அனைவருக்கும் மைண்ட் வாய்ஸ் கேட்டிருக்கும். யாரும் வெளியே எதையும் சொல்லிக்கொள்ளவில்லை. அதிக நீரோட்டம் இல்லை, எனவே பின்னிருக்கையில் இருப்பவர்கள் இறங்கவேண்டியதில்லை. அந்தப் பாதையைக் கடந்தோம்.

அங்கிருந்து நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு பாதையை சஷாங்க் தேர்ந்தெடுத்திருந்தார். அதுவும் எங்களுக்குச் சொல்லாமலேயே. அதுவொரு சவாலான மலைப்பாதை. ஒவ்வொரு வளைவிலும் திரும்பும்போது மிகுந்த கவனத்துடன் வேகத்தைக் குறைத்து கியரை மாற்றவேண்டியிருந்தது.

அணியினருக்கும் எங்களுக்குமே கூட சில வளைவுகளில் வண்டி சறுக்கியது. பிரேக் ஹாண்டிலிலிருந்து கையெடுக்காமல்தான் கிட்டத்தட்ட அனைவருமே ஓட்டிக் கொண்டிருந்தனர். உச்சியை அடையும்போது காற்று பலமாக வீசத்தொடங்கியது. தட்ப நிலை வெகுவாக மாறியிருந்தது. காலையில் அத்தனைக் குளிர் இல்லாததால் ஒரு லேயர் மட்டுமே அணிந்திருந்தோம். இங்கு குளிர் ஒரு டிகிரிக்கும் குறைந்து, உச்சியை அடையும்போது பனி பெய்யத் தொடங்கியது. முதலில் பனிக்கட்டி மழையும், அதைத் தொடர்ந்து பனிப்பொழிவும்.

வானத்திலிருந்து ஜல்லிக்கற்கள் அதிக விசையில் எங்கள்மேல் விழுவதைப் போலிருந்தது அந்தப் பனிக்கட்டி மழை. ஓரிடத்தில் எங்கள் வண்டிகளை ஓரம்கட்டி ரெயின்கோட்டுகளை அணிந்துகொண்டோம். முன்பின் தெரியாத ஏதோ மலையுச்சியில், மழைக்குக் கூட ஒதுங்கமுடியாத இடத்தில் நின்றுகொண்டிருந்தோம்.

எங்களுக்குப் பிறகு வந்த சரக்கு லாரி ஒன்று அங்கு பழுதாகி நின்றது. அவர்களுக்குச் சில உதவிகளைச் செய்துவிட்டு மழையிலேயே பயணத்தைத் தொடர்ந்தோம். கொட்டிய கனமழையில் சாலையைச் சரியாகப் பார்க்கமுடியவில்லை. எனினும் நிறுத்தாமல் பயணத்தைத் தொடரவேண்டும் என்பதுதான் பெரும்பாலானோரின் விருப்பமாக இருந்தது.

மலையுச்சியிலிருந்து நாங்கள் இறங்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மழை நின்றது. ‘s’ வடிவ வளைவுகள்கொண்ட அந்தப் பகுதியில் நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். அங்கு சாலையின் எல்லையில் எந்தப் பாதுகாப்பு சுவர்களும் இல்லை. மலையின் மேலிருந்துகொண்டே கீழே அடிவாரம், அதைத் தாண்டிய சமதளம் வரை அனைத்தையும் காணலாம். எங்களுக்கு முன் சென்ற ஒரு பயணக்குழு சட்டென சாலையிலிருந்து விலகி, செங்குத்தாக மலையிறங்க தொடங்கினார்கள். அதாவது, பைக்கை சாலையில் அல்லாமல் அப்படியே மலைப்பாறைகளின் வழியே கீழே செலுத்தினர். இது அனைத்து ஆஃப்ரோடு பிரியர்களும் விரும்பி செய்வதுதானாம்.

இதென்ன கிறுக்குத்தனம் என்று நான் அதிர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும்போதே மேலும் பல பைக்குகள் அவ்வாறே இறங்கத்தொடங்கின. இதைப் பார்த்து எங்கள் குழுவில் சிலர் அதேபோல செய்ய எத்தனிக்க, சஷாங்க் அனுமதியளிக்க மறுத்துவிட்டார். ஆனால், எங்களுடன் வந்த டெம்போ ட்ராவலர் வாகனத்துக்கு அந்தத் தடையெல்லாம் இல்லை. அந்த ஓட்டுநர், சர்வ சாதாரணமாக வேனை சாலையின் குறுக்கே நெட்டுக் குத்தலாக இறக்கிக்கொண்டிருந்தார். அதுவும் நல்ல வேகத்தில். எனக்கு அது எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்றே தோன்றியது. ஆனால், அவர் வாகனத்தை மிக எளிதாகக் கையாண்டார்.

இருசக்கர வண்டியானாலும் சரி, நான்கு, ஆறுசக்கர வண்டியானாலும் சரி, அவ்வாறு மலையைக் கடப்பதென்பது விளையாட்டல்ல. சமநிலை சற்றே பிசகினாலும், மலையடிவாரம் வரை வண்டி உருண்டுவிடும் அபாயம் உண்டு. அவ்வாறு நடந்தும் இருக்கிறது. அதற்குச் சாட்சியாக பள்ளத்தில் விழுந்து நொறுங்கி வருடக்கணக்கில் அங்கேயே கிடக்கும் லாரிகளை பார்த்தபடிதான் எங்களது பயணமும் இருந்தது.

நாங்கள் ஒவ்வொரு வளைவாகச் சுற்றி பைக்கில் மலையிறங்கிகொண்டிருந்தபோது, அந்த டெம்போ ட்ராவலர் வேன் மட்டும் குறுக்கே இறங்கி, எங்களுக்கு முன்பு சென்றது. மனத்தின் ஓரத்தில் இவையனைத்தையும் செய்துபார்க்க வேண்டும் என்ற எண்ணமும் பரவசமும் இருந்தாலும், இதைப் போன்று இன்னும் என்னென்ன செய்யப்போகிறார்களோ என்ற கவலையும் இல்லாமல் இல்லை.

மதிய உணவின்போது சஷாங்கிடம் ப்ரீத்தி, ஆயுஷ், பூஜா வாட்டர்க்ராஸிங்கை பற்றிக் கேட்க, ‘இந்த மலைப்பயணம்தான் உங்களுக்கு சர்ப்ரைஸ். எல்லாவற்றையும் முன்பே சொல்லிவிட்டால், உங்கள் பயணத்தில் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது. இனிமேல் இப்படிதான்’ என்றார்.

‘நீங்கள் சொல்லும் எதையும் இனிமேல் நாங்கள் நம்பப்போவதேயில்லை’ எனச் சொல்லிவிட்டு அவர்கள் நகர்ந்தனர்.

Pangong Lake

பாங்காங் ஏரிக்குச் செல்லும் பாதையில் பெரும்பான்மை தூரம் மோசமான சாலைகள்தான். குழி மேடுகளில் இறங்கியேறி பைக்கின் சஸ்பென்ஷன் அடிவாங்கியிருந்தது. எங்களின் முதுகுத் தண்டுவடங்களுக்கு இடையில் இருந்த ஜவ்வுகளும் அதே நிலைதான். அதிர்வுகளுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் வலியால் அவை கதறிக்கொண்டிருந்தன. இருப்பினும் உலகின் மிக அழகிய இடங்களில் ஒன்றான பாங்காங் ஏரியைக் காணும் மகிழ்ச்சியான தருணத்தை நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது. வழியில் ஓரிடத்தில் ராணுவ வாகனமொன்று சாலையை மறித்து நின்றிருந்தது. நாங்கள் என்னவென்று விசாரிக்கச் சென்றோம். அந்தப் பகுதியின் உயர்மட்ட ராணுவ அதிகாரி யாரோ அந்தச் சாலையில் பயணம் செய்கிறார். அவர் கடந்து செல்லும் வரை எதிர்புறம் எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது என்றனர். சொன்னதோடு சிவப்பு துணியை கொண்டு சாலையையும் மறைத்துவைத்தனர்.

பாங்காங் ஏரி இந்திய- சீனாவின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கிறது. சொல்லப்போனால் மூன்றில் ஒரு பங்கு ஏரி இந்திய எல்லையில் உள்ளது. மற்ற பகுதி சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. இரண்டு நாடுகளும் வெவ்வேறு பெயர்களில் இந்த ஏரியைச் சொந்தம் கொண்டாடுகின்றன. சீனாவுடனான எல்லைப்பகுதி என்பதால் இங்கே ராணுவ கெடுபிடிகள் கொஞ்சம் அதிகம். பொதுமக்கள் அப்பகுதியில் செல்லத் தடையில்லை எனினும், அச்சாலைகளில் ராணுவ போக்குவரத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

சுமார் இருபது நிமிட காத்திருப்புக்குப் பிறகு ராணுவ ஜீப்புகள் வரும் சத்தம் கேட்டது. முதலில் வந்த இரண்டு வாகனங்களில் இருந்த துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள், பொதுமக்கள் சாலையின் குறுக்கே வந்துவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு சென்றார்கள். அதற்குப் பின் வந்த நான்கு ஜீப்புகளிலும் ராணுவ அதிகாரிகள் இருந்ததை காணமுடிந்தது. மையமாக வந்த வண்டியில்தான் அந்த உயர் அதிகாரி இருந்திருக்கவேண்டும். அந்த வாகனத்திற்குப் பிறகும் ஆறேழு சிறிய, பெரிய ரக ராணுவ வேன்கள் சென்றன. அனைத்து வாகனங்களும் சென்றதும் சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து விடப்பட்டது.

அங்கிருந்து இன்னும் இரண்டு மணி நேரம் பயணம் செய்யவேண்டியதிருந்தது. எல்லைப்பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததால் கைப்பேசியில் சிக்னல் இல்லை. எங்கே இருக்கிறோம், இன்னும் எத்தனை தொலைவு கடக்க வேண்டும் என்பது உட்பட எந்தத் தகவலும் தெரியவில்லை. முன் செல்லும் பைக்கை நூல் பிடித்ததை போலப் பின்பற்றுவதுதான் வழி. ஒரு வேளை வழி தவறிவிட்டால், பைக்கில் இருக்கும் கால்டேங்க் எரிபொருளைக் கொண்டு எங்கு தஞ்சம் புகுவது என்று இருவரும் பேசிக் கொண்டிருந்தோம்.

Pangong Lake, Leh

செல்லும் வழியில் ஊர்களின் பெயர்ப் பலகை, மைல்கல் ஏதேனும் இருக்குமெனக் கவனமாகப் பார்த்துவந்தேன். ஒன்று கூட தென்படவில்லை. மணாலியிலிருந்து லே வரை வழிநெடுகிலும் பெயர்ப்பலகைகள் இருந்தன. கூடவே எல்லைப்புறச் சாலைகள் அமைப்பின் சார்பில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகைகள். 

பைக் பயணம் செய்யும் எங்களைப் போன்ற ஆர்வக்கோளாறுகளுக்காகவே குறும்பான எச்சரிக்கை வாசகங்கள் பலவற்றை ஆங்காங்கே வைத்திருந்தனர். அவை பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருந்தன. ‘BRO (Border Roads Organisation) எனப் பெயரிடப்பட்ட அப்பலகைகளில் வேகம் கூடாது, மது அருந்தக் கூடாது என்பதை அவர்கள் பாணியில் சொல்லியிருந்தார்கள். ஒரு பலகையையும் தவறவிடாமல் நாங்கள் படித்துவிட்டு, உணவுக்கு நிறுத்துமிடத்தில் அதுபற்றி பேசி சிரித்துக்கொண்டிருப்போம். அதில் சில இப்படி இருந்தன.

‘Don’t be a Gama in the land of Lama’

’oh yes its true, we struggle with cardio too’

‘If you want to stay married, divorce speed’

’Beep beep, Don’t Sleep’

 அன்று அதுபோன்று எதுவுமின்றி மலைகளையும், யாருமில்லாத வெட்டவெளிகளையும் கடந்து சென்றுகொண்டிருந்தோம்.

கை கடிகாரத்தில் மணி ஐந்து எனப் பார்த்ததிலிருந்தே பாங்காங் ஏரிக்கு அருகில்தான் இருக்கிறோம் எனத் தோன்றியது. ஏரி கண்ணில்படும் முதல் காட்சியைப் பதிவுசெய்வதற்காகக் காணொளியைப் பதிவுசெய்துகொண்டிருந்தேன். ஐந்து நிமிடங்கள் பத்தானது, அது இருபதானது ஆனால் இடம் வந்தபாடில்லை. பொறுமையிழந்து கைப்பேசியை உள்ளே வைத்ததும் முன் சென்றுகொண்டிருந்தவர்கள் சைகை காட்டினர். அது என்னவென்று பார்த்துவிட்டு இடதுபுறம் திரும்பிய கணத்தில் கண்முன் அந்த நீலக் கடல் விரிந்திருந்தது.


 (தொடரும்)


- ராஜ்ஸ்ரீ செல்வராஜ் 


rajshriselvaraj02@gmail.com

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சதுரகிரி: `கொள்ளை அழகு!' - மிஸ் பண்ணவேகூடாத வழித்தடம் | Photo Album

இயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி மலைஇயற்கை எழில்மிகு சதுரகிரி ... மேலும் பார்க்க

வந்தே பாரத்: 'உங்கள் ஸ்டேஷனுக்கு ரயில் வர 15 நிமிடங்கள் தான் இருக்கிறதா?' - டிக்கெட் புக் செய்யலாம்!

வந்தே பாரத் ரயில்களின் டிக்கெட் புக்கிங்கில் புதிய மாற்றம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது தெற்கு ரயில்வே துறை. இனி, உங்கள் ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயில் வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, அந்த ... மேலும் பார்க்க

'இனி Unreserved-ல் 150 டிக்கெட்கள் மட்டும் தான்...' - இந்திய ரயில்வேயின் புதிய அறிவிப்பு

இந்திய ரயில்வே துறை, ரயில் பயணங்களில் புதிய புதிய மாற்றங்களைத் தொடர்ந்து அறிவித்து வருகின்றது. டிக்கெட் புக்கிங் நாள் குறைப்பு, ஆதார் இணைப்பு... வரிசையில், தற்போது லேட்டஸ்டாக வேறொரு அறிவிப்பு வெளியாகி... மேலும் பார்க்க

கால்பந்து மைதானத்தை விடச் சிறியது; ஆனால் மக்கள் தொகை அதிகம் - உலகின் நெரிசலான தீவு பற்றி தெரியுமா?

ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரியான விக்டோரியா ஏரியின் கிழக்கு கரையில் அமைந்துள்ள மிகிங்கோ தீவு, உலகின் மிக சிறிய, நெரிசலான பகுதியாக அறியப்படுகிறது. இந்த தீவு, கால்பந்து மைதானத்தின் பாதி அளவு கூட இல்லாத... மேலும் பார்க்க

ஆப்பிள் மரங்களும் சூரியகாந்தி மலர்களும்! - சிலிர்க்க வைத்த இமயம் | திசையெல்லாம் பனி- 7

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க