விருதுநகர்: `தொடர் விபத்து' 20 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் தற்காலிக ரத்து - என்ன காரணம்?
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளின் முக்கிய தொழிலாக பட்டாசு தொழில் விளங்கி வருகிறது. இந்தத் தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் மூலம் ஆண்டிற்கு 6,000 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. எவ்வளவு வருமானம் இருக்கிறதோ அவ்வளவு ஆபத்தும் இந்த தொழிலில் இருக்கிறது. இப்படி ஜனவரி மாதத்தில் இருந்து ஜூலை வரை 7 மாதங்களாக அடுத்தடுத்து தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக ஜூன், ஜூலை இம்மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து நான்கு வெடி விபத்துகளில் 14 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஜனவரி மாதத்தில் இருந்து ஜூலை மாதம் தற்போது வரை 11 வெடி விபத்துகளில் 30 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோன்ற பட்டாசு ஆலை வெடி விபத்தை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தொடர் கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளை நடத்தி வருகிறது. இத்துடன் தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ள 10 குழுக்களையும் அமைத்து ஆய்வுப்பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதனுடன் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் போர் மேன்கள், உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு பணியாளர்களுக்கும் தொழிலக பாதுகாப்புத்துறை சார்பாக பாதுகாப்பு குறித்தும் செயல்முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சிகளில் பங்கேற்காத 215 பட்டாசு ஆலைகளுக்கு 16 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, பயிற்சியில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த பயிற்சியில் 195 பட்டாசு ஆலைகள் பங்கேற்ற நிலையில், பயிற்சியில் பங்கேற்காத 20 பட்டாசு ஆலைகளின் உரிமங்களை தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் ராமமூர்த்தி பரிந்துரையின் பெயரில், மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
"அபராத தொகையை செலுத்தி பயிற்சியில் பங்கேற்ற பின்பு மீண்டும் இந்த தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனுமதி வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.